Published : 21 Nov 2019 12:55 PM
Last Updated : 21 Nov 2019 12:55 PM
இந்தியாவில் ஒரே நாடு, ஒரே மொழி என்கிற கருத்து மத்திய அரசுக்கு இல்லை என உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று பதில் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சில கேள்விகளை நேற்று உள்துறை அமைச்சகம் முன் வைத்தார். அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பதிலளித்தார்.
ஒரே நாடு, ஒரே மொழி என, உள்துறை அமைச்சர் அறிவித்தாரா? இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும் என்று சொன்னாரா? என வைகோ கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு உள்துறை இணை அமைச்சர் அமைச்சர் கிஷன் ரெட்டி பதில் அளிக்கையில், ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி என்ற கருத்து எதுவும் மத்திய அரசிடம் இல்லை எனத் தெரிவித்தார்.
எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள அனைத்து மொழிகளையும், இந்திக்கு இணையாக நடுவண் அரசு கருதிச் செயல்படுமா? அவ்வாறு இருந்தால், இந்தியை ஒப்பிடுகையில், இதர இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு, குறிப்பாகத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு செலவிட்டுள்ள தொகை குறித்த புள்ளி விவரங்களைத் தருக என வைகோ கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு உள்துறை இணை அமைச்சர் அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பதில்.
''இந்திய அரசியல் சட்டம், அனைத்து மாநிலங்களையும் சமமாகவே கருதுகின்றது. மொழிப் பிரச்சினைகள், பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எனவே, நடுவண் அரசு மற்றும் மாநில அரசுகளின் பொதுவான அதிகார வரையறைக்குள் இடம் பெறுகின்றது. மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி, மொழிகளின் வரிசைப்படி மானியங்கள் செலவிடப்படுவது இல்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில் செலவிடப்பட்டுள்ள தொகை குறித்த புள்ளிவிவரங்கள் தரப்படுகின்றன.
மத்திய இந்தி இயக்ககத்துக்கு செலவிடப்பட்ட தொகை 2016-17 ஆம் ஆண்டில் ரூ.46.53 கோடி. 2017-18 ஆம் ஆண்டில் ரூ.46.53 கோடி, 2018-19 ஆம் ஆண்டில் ரூ.46.30 கோடி.
மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்துக்குச் செலவிடப்பட்ட தொகை 2016-17 ஆம் ஆண்டில் ரூ.40.50 கோடி. 2017-18 ஆம் ஆண்டில் ரூ.40.50 கோடி. 2018-19 ஆம் ஆண்டில் ரூ.40.07 கோடி.
இந்தி மற்றும் அனைத்து இந்திய மொழிகளிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சொற்களை உருவாக்கி வரையறுக்க செலவிடப்பட்ட தொகை 2016-17 ஆம் ஆண்டில் ரூ.12.10 கோடி, 2017-18 ஆம் ஆண்டில் ரூ.12.10 கோடி. 2018-19 ஆம் ஆண்டில் ரூ.12.10 கோடி.
செம்மொழி தமிழ், சிந்தி, உருது, சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட மொழிகளின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட மானியம் 2016-17 ஆம் ஆண்டில் ரூ.293.15 கோடி. 2017-18 ஆம் ஆண்டில் ரூ.355.50 கோடி. 2018-19 ஆம் ஆண்டில் ரூ.415.25 கோடி''.
இவ்வாறு உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பதில் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...