Published : 21 Nov 2019 12:29 PM
Last Updated : 21 Nov 2019 12:29 PM

அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது; அதிர்ஷ்டமும் வேண்டும்: டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்: கோப்புப்படம்

சென்னை

அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது. அதிர்ஷ்டமும் வேண்டும் என, நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

சென்னை, தியாகராய நகரில் இன்று (நவ.21) டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அரசியலில் அனுபவம் வாய்ந்த நீங்களே அதில் நிலைக்கவில்லை, கமல்-ரஜினி இணைந்தால் என்ன நடக்கும் என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு டி.ராஜேந்தர் பதில் அளித்துப் பேசியதாவது:

"நான் ஆட்சியைப் பிடிப்பேன், முதல்வராவேன் என என்றைக்காவது சொல்லியிருக்கிறேனா? நான் முதல்வராவதற்கும், ஆட்சியைப் பிடிப்பதற்கும் கட்சி தொடங்கவில்லை. ஆட்சியில் இருப்பவர்களை ஒரு 'பிடி' பிடிப்பதற்காக கட்சியைத் தொடங்கியவன் நான். எம்ஜிஆர் ஆட்சியிலிருந்த காலத்திலேயே அவருக்கு எதிராக யாராவது நடை போட்டார்களா? நான் நடைபோட்டேன். நான் சாதாரணமானவன்.

சினிமாவில் ரஜினியும் கமலும் எனக்கு மூத்தவர்கள். நான் இருவருக்குமே ரசிகன். அரசியலில் வேண்டுமானால் நான் இருவருக்கும் மேல் கொஞ்சம் அனுபவத்துடன் இருக்கிறேன். திமுக கொள்கை பரப்புச் செயலாளராக, பூங்கா நகர் எம்எல்ஏவாக மாநில சிறுசேமிப்பு துறையின் துணைத் தலைவராக அமைச்சர் பதவிக்கு நிகரான பதவியில் இருந்துள்ளேன். அந்தப் பதவியை, ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ராஜினாமா செய்தேன். அப்படிப்பட்ட ஒருவர், அரசியலில் நிலைக்கவில்லை எனச் சொல்வதில் எனக்கு வருத்தமில்லை.

பேருந்து நடத்துநராக விசில் அடித்தவர் ரஜினி. அவர் சினிமாவில் வந்தால் மக்கள் அவருக்கு விசில் அடிப்பார்கள் என யாராவது கனவு கண்டார்களா? 'அபூர்வ ராகங்கள்' படத்தில் இரும்பு கேட்டைத் திறந்துகொண்டு வந்தாரே? அந்தப் படத்தில் யார் கதாநாயகன்? சாதாரண கதாபாத்திரத்தில் நடித்து, வளர்ந்து தன்னை சூப்பர் ஸ்டாராக நிலைநிறுத்தியிருக்கிறார் என்றால் இது சாதாரணப் போராட்டம் அல்ல. இதை ரசிகனாகச் சொல்கிறேன்.

'களத்தூர் கண்ணம்மா'வில் அறிமுகமாகி சினிமா களத்தில் கலக்கிக்கொண்டிருக்கிறார் கமல். இவர்களெல்லாம் எனக்கு மூத்தவர்கள்.

என் மகன் திருமணத்திற்கு ரஜினிக்கு பத்திரிகை அளிக்கச் சென்றேன். என்ன மரியாதை? என்ன பணிவு? அந்த தன்னடக்கத்தால் தான் அவர் உயர்ந்தார். அவர்கள் ஒரு முடிவெடுத்தது குறித்து நான் என்ன சொல்வது? அனுபவம் மட்டும் அரசியலில் வெற்றி பெறாது. இதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. அரசியலில் வெற்றி பெற அனுபவமும் வேண்டும், அதிர்ஷ்டமும் வேண்டும்".

இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x