Published : 21 Nov 2019 11:16 AM
Last Updated : 21 Nov 2019 11:16 AM
ஈரோடு ஈஸ்வரன் கோயிலில் அன்னதானத்திற்காக பக்தர்கள் வழங்கிய அரிசி கடத்தப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு கோட்டை பகுதியில் ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மதிய நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இது தவிர பக்தர்களின் நன்கொடை மூலம், அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகின்றது. இதற்காக பக்தா்கள் அரிசி மூட்டைகளை கோயிலுக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த வாரம் இரவில், ஈஸ்வரன் கோயிலிலில் இருந்து அரிசி மூட்டைகளை மூன்று சக்கர சைக்கிளில் எடுத்து செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அன்னதானத்திற்காக வழங்கப்படும் அரிசியை சிலர் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நந்தகுமார் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, பக்தர்கள் நன்கொடை வழங்கிய அரிசி மூட்டைகளை கோயிலில் இருந்து எடுத்துச் செல்வது வீடியோ மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எலித்தொல்லை, மழை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பாதுகாப்பாக வெளியிடத்தில் வைக்கும் வகையில், அரிசி மூட்டைகள் எடுத்து செல்லப்பட்டதாக வீடியோவில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், இரவு கோயில் நடை சாத்தப்பட்ட பிறகு, எக்காரணம் கொண்டும் அதிகாரிகள் அனுமதியின்றி எந்த பொருளும் எடுத்து செல்லக்கூடாது என்ற விதி முறை உள்ளது. இதை மீறியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.
இதனிடையே கோயிலில் பல ஆண்டுகளாக திருப்பணிகளைச் செய்து வரும் அருள்நெறித் திருக்கூட்டம் என்ற அமைப்பினர், அன்னாபிஷேகத்தின் போது, பக்தர்களுக்கு பிரசாதம் தயாரிக்க அரிசியை எடுத்துச் சென்றதாகவும், இதில் எந்த தவறும் நடக்கவில்லை என விசாரணை அதிகாரிகளிடம் மற்றொரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT