Published : 21 Nov 2019 08:42 AM
Last Updated : 21 Nov 2019 08:42 AM

சிட்லபாக்கம் ஏரி சீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு 

சென்னை

‘சென்னை சேத்துப்பட்டு ஏரி, ஆவடி பருத்திப்பட்டு ஏரி, மாதவரம், அம்பத்தூர் ஏரிகள் மறுசீரமைக் கப்பட்டதைப்போல், தாம்பரம் வட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் ஏரியில் சூழல் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

219 ஏக்கர் ஆயக்கட்டு பரப்பைக் கொண்ட இந்த ஏரி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியின் கொள்ளளவு மீட்கப்படும். உபரி நீர் வெளியேறும் பகுதி சீரமைக்கப்படும். ஏரியை சீரமைக்கும் பணிகள் ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்படும்’’ என சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 5-ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து, ஏரியை சீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை சுற்றுச்சூழல் துறை இயக்குநர் தயாரித்து, அளித்தார். ‘சிட்லபாக்கம் ஏரி, முன்பு நீர்ப்பாசன ஏரியாக இருந்தது. 219 ஏக்கர் ஆயக்கட்டு பரப்பைக் கொண்ட இந்த ஏரி, பின்னர் நகர்ப்புற ஏரியாக மாறிவிட்டது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திட்டப்படி, சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதன் முந்தைய கொள்ளளவான 7 மில்லியன் கன அடியை மீட்க முடியும். ஏரியின் கரையை பலப் படுத்துதல், உபரிநீரை வெளியேற் றும் அமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.25 கோடியை ஒதுக்க வேண்டும்’ என அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதை கவனமுடன் பரிசீலித்த தமிழக அரசு, ரூ.25 கோடியை ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள் ளது. அதில், தமிழ்நாடு சுற்றுச் சூழல் மேலாண்மை முகமை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் இந்த நிதி வழங் கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x