Published : 20 Nov 2019 06:40 PM
Last Updated : 20 Nov 2019 06:40 PM

13 வயது சிறுமியிடம் இருசக்கர வாகனத்தைக் கொடுத்தனுப்பிய பெற்றோர்: லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 13 வயது சிறுமி மீது சரக்கு லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், வலையங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (38). இவர் அதே பகுதியில் பெயிண்ட் கடையை நடத்தி வருகிறார். இவரது மகள் திவ்யா (13). மதுரை பெருங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டிலுள்ள இருசக்கர வாகனத்தை ஓட்டிப் பழகி வந்தார். பெற்றோரும் 18 வயதுக்கு குறைவான மகளை இருசக்கர வாகனத்தை ஓட்ட அனுமதித்துள்ளனர். இதனால் திவ்யா, இருசக்கர வாகனத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து தனது தந்தையின் கடைக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் திவ்யா சென்றுள்ளார். பெருங்குடி - திருமங்கலம் பைபாஸ் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த சரக்கு லாரி திவ்யாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி விழுந்த அவர் லாரியின் அடியில் சிக்கி, சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். படுகாயமடைந்த திவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

வலையங்குளம் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் பாலம் அமைத்துத் தரவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் அதே இடத்தில் சிறுமி லாரியில் சிக்கி உயிரிழந்ததால் பொதுமக்களும், திவ்யாவின் உறவினர்களும் வலையங்குளம் தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பொதுமக்களை சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்து கலைந்து போகச் செய்தனர். பின்னர் சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி 18 வயதுக்குக் குறைவானவர்களை வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்து விபத்தில் சிக்கினால் பெற்றோரைத் தண்டிக்க சட்டம் உள்ளது. இதுபோன்ற பல்வேறு விழிப்புணர்வு சட்டங்கள் வந்தாலும் வாகனத்தை இயக்க அனுமதிப்பது, அதுவும் தேசிய நெடுஞ்சாலையில் இயக்க அனுமதிப்பது இன்றும் நடக்கத்தான் செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x