Published : 21 Aug 2015 08:17 PM
Last Updated : 21 Aug 2015 08:17 PM
2014-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்கடத்தல் குற்றங்கள் அதிகம் பதிவாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் ஆட்கடத்தல் குற்றங்கள் அதிகம் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2014-ம் ஆண்டில் மட்டும் 509 ஆட்கடத்தல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட 590 பேர் ஒழுக்கக் கேடான ஆட்கடத்தல் தடுப்புச் சட்டம், 1956-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது அயல்நாடுகளிலிருந்து பெண்களை கடத்திக் கொண்டு வருவது, விபச்சாரத்துக்காக சிறுமிகளை விலைக்கு வாங்கியும் விற்கவும் செய்வது என்ற அடிப்படையில் ஆட்கடத்தல் புகார்கள் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து சென்னை பல்கலைக் கழகத்தின் குற்றவியல் கல்வித்துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் எஸ்.ராம்தாஸ் கூறும்போது, “உண்மையான குற்ற நிகழ்வுகளை ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு அல்லது அதற்கும் குறைவானவையே புகார்களாக பதிவு செய்யப்படுகிறது. எனவே ஆட்கடத்தலை தடுக்கவும், மீட்கப்படுபவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் கவனம் தேவை.
தற்போது, முறையான பின் நடவடிக்கைகள் இல்லை, மீட்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவி, மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவதில்லை. இதில் கவனம் செலுத்தப்படுவது அவசியம். ஏனெனில் இவர்கள் மீண்டும் கடத்தப்பட வாய்ப்பிருக்கிறது” என்கிறார்.
ஆட்கடத்தல் மற்றும் எச்.ஐ.வி.க்கான் ஐநா மேம்பாட்டு திட்டத்தின் துறைத் தலைவர் ஆர்.திலகராஜ் 2010-ம் ஆண்டு நடத்திய ஆய்வின் படி, ஆட்கடத்தலுக்கு ஆட்படுபவர்களில் 20 சதவீதம் பேருக்கு எச்.ஐ.வி. தாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து போலீஸ், நீதித்துறை, அரசு சாரா சமூக தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியத்தை அவரது ஆய்வு எடுத்தியம்பியுள்ளது. இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமே எச்.ஐ.வி. நோய்த்தொற்றை தடுக்க முடியும் என்கிறது இந்த ஆய்வு.
ஆட்கடத்தலுக்கு ஆளானவர்களில் 42.1 சதவீதத்தினர் சிறுவர், சிறுமிகளாக இருக்கும் போது கடத்தப்பட்டவர்கள் என்றும், கடத்தப்பட்டவர்களில் 93 சதவீதத்தினர் தங்கள் தாய்மொழி தமிழ் என்றும் தெரிவித்ததாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் பேராசிரிய திலக ராஜ் ஆலோசனை வழங்கும்போது ஆண்டுக்கு இருமுறை ஆட்கடத்தல் பற்றிய ஆய்வு நடைபெற வேண்டும் என்கிறார்.
ராமதாஸ் கூறும்போது, இதற்கென்றே செயல்படும் கும்பல்களே இதற்கு முழு காரணம். தண்டனைகள் மேலும் கடுமையாக்கப் படவேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT