Published : 20 Nov 2019 12:44 PM
Last Updated : 20 Nov 2019 12:44 PM
கீழடி ஆய்வுக்காக ஒதுக்கிய நிதி எவ்வளவு என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் பதில் அளித்துள்ளார்.
வைகோ இன்று (நவ.20) மாநிலங்களவையில் கீழடி ஆய்வுகள் குறித்து கேள்வியெழுப்பினார். அப்போது, மதுரை அருகே, வைகை ஆற்றங்கரைச் சமவெளியில், கீழடி என்ற இடத்தில் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக் காலத்தவை என்பது உண்மையா என கேள்வியெழுப்பினார்.
வைகோவின் கேள்விக்கு பதிலளித்த பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரகலாத் படேல், "கீழடியில், தமிழ்நாடு தொல்பொருள் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், கி.மு. ஆறு முதல் மூன்றாம் நூற்றாண்டுக் கால கட்டத்தைச் சேர்ந்தவை என, கரிமப் பகுப்பு ஆய்வுச் சோதனைகளின் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது," என தெரிவித்தார்.
இதையடுத்து வைகோ, "கீழடி ஆய்வுகளில், இந்தியத் தொல்பொருள் துறையின் பங்கு என்ன? அதற்காக ஒதுக்கிய நிதி எவ்வளவு?," என கேள்வியெழுப்பினார்.
அதற்கு மத்திய அமைச்சர் பிரகலாத் படேல், "இந்தியத் தொல் பொருள் துறை, 2014-15, 2015-16, 2016-17 ஆம் ஆண்டுகளில் கீழடியில் மூன்று களங்களில் ஆய்வுகள் மேற்கொண்டது. அதற்காக செலவிடப்பட்ட நிதி 2014-15 ஆம் ஆண்டில் 7 லட்சத்து 70,010 ரூ., 2015-16 ஆம் ஆண்டில் 48 லட்சத்து 50,798 ரூ., 2016-17 ஆம் ஆண்டில் 35 லட்சத்து 50,000 ரூ., 2017-18 ஆம் ஆண்டில் 22 லட்சத்து 50,000 ரூபாய்," என பதிலளித்தார்.
இதன்பின், "கீழடியில் கிடைத்த பழம்பொருட்களைக் காட்சிப்படுத்த, அங்கே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படுமா? நாடு முழுமையும் உள்ள பிற அருங்காட்சியகங்களில் அந்தப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமா?," என வைகோ எழுப்பிய கேள்விக்கு, "இல்லை. கீழடியில், தமிழக அரசு ஒரு அருங்காட்சியகம் அமைக்கின்றது," என பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT