Published : 19 Nov 2019 10:41 AM
Last Updated : 19 Nov 2019 10:41 AM

மிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது ஏன்? - அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி

ஸ்டாலின் - அமைச்சர் பாண்டியராஜன்: கோப்புப்படம்

சென்னை

மிசா காலத்தில் பல கொடுமைகளை திமுக அனுபவித்தும் 1977 தேர்தலில் மக்கள் ஏன் தோல்வியைத் தந்தார்கள் என, அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என, அமைச்சர் பாண்டியராஜன் கூறியதையடுத்து திமுகவினர் பலரும் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகி சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டார் எனவும், பாண்டியராஜன் ஆதாரம் இல்லாத தகவல்களை வெளியில் சொல்லக் கூடாது எனவும், 'இந்து தமிழ் திசை' நாளிதழில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

இந்நிலையில், அந்தக் கட்டுரைக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் பாண்டியராஜன் தன் ட்விட்டர் பக்கத்தில், "ஆனைக்கும் அடி சறுக்கும்! நான் மதிக்கும் நீதிபதி சந்துரு நான் பேசியதை முழுமையாக கேட்காமல் இந்தக் கருத்தைப் பதிவிட்டதில் வருத்தம். மிசா காலத்தில் ஸ்டாலின் ஓராண்டு சிறையில் இருந்ததையோ, அவர் சிறையில் தாக்கப்பட்டதையோ நான் மறுக்கவில்லை.

என்னுடைய கேள்வி எல்லாம் எதற்காக ஸ்டாலின் அன்று சிறையிலிடப்பட்டார் என்பது குறித்து. ஐனநாயகத்தைக் காப்பாற்றவோ, அவசர நிலையை எதிர்த்தோ எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கு பெறவில்லை என்பது கருணாநிதி உட்பட பலரும் ஏற்றுக் கொண்ட உண்மை.

நான் சொன்ன காரணம் எங்கள் மாவட்டச் செயலர் பாலகங்கா முதல் திமுகவில் இன்று. முன்னாள் அமைச்சர்கள்/எம்எல்ஏக்கள் நால்வர் பொது வெளியில் பேசிய கருத்துகளே! அவருடைய கைது மிசா சட்டத்தின் பிரிவு 3(1) (a) இல் உள்ள 3 உட்பிரிவுகளில் எந்த அடிப்படையில் நிகழ்ந்தது என்பதை காவல் உத்தரவு மூலம் மட்டுமே அறிய முடியும்.

அமெரிக்கத் தூதுவர் ஆண்ட்ரூ சிம்கின்ஸ் தன் தலைமைக்கு அனுப்பி விக்கிலீக்ஸ் வெளிப்படுத்திய ஆதாரங்களைத் தந்து கொண்டிருக்கும் திமுகவினர் ஏன் எந்தக் காரணமும் இல்லாமல் அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் ஸ்டாலினைக் கைது செய்தது என்ற நிலைப்பாட்டை எடுப்பதில்லை? தியாக வரலாறு என்ற புனைவு தகர்ந்து விடும் என்று பயமா ?

அல்லது இவ்வளவு கொடுமைகள் திமுக அனுபவித்தும் 1977 தேர்தலில் மக்கள் ஏன் தோல்வியைத் தந்தார்கள்? அடுத்த 2 ஆண்டுகளில் இவ்வளவு கொடுமைகள் செய்த அதே காங்கிரஸ் உடன் உறவு கொண்டது இவ்வளவு தியாகம் செய்த தொண்டர்களுக்கு செய்த துரோகம் அல்லவா?" என்று அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x