Published : 18 Nov 2019 07:34 PM
Last Updated : 18 Nov 2019 07:34 PM
ரயில் பயணிகளின் கவனத்தைத் திசை திருப்பி நகை, பணத்தைத் திருடிய 57 வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 70 சவரன் நகை, 77.5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
ரயிலில் வரும் பயணிகளிடம் சாதுர்யமாகப் பழகி அவர்கள் பணம், நகைகளைத் திருடுவதாக ரயில்வே போலீஸாருக்குத் தொடர் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையொட்டி தீவிரக் கண்காணிப்பில் இருந்த ரயில்வே போலீஸாரிடம், கடந்த வாரம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் நகை திருடிய வேலூரைச் சேர்ந்த சத்யா என்ற இளம்பெண் பிடிபட்டார்.
சத்யாவிடமிருந்து 20 சவரன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. சத்யாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் சத்யா மட்டுமல்ல இன்னொரு இளம்பெண்ணும் இந்தத் திருட்டில் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்தது. சத்யா கொடுத்த தகவலின் அடிப்படையில், ஜோலார்பேட்டை பாபர் நகரைச் சேர்ந்த தேவி (24) என்கிற இளம்பெண்ணை எழும்பூர் ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
தேவியிடமிருந்து 70 சவரன் நகையும், ரூ.77,500 ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். ரயில் பயணிகளிடம் தேவி திருடியதாக சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலைய போலீஸாரிடம் மட்டும் 71 வழக்குகள் பதிவாகியுள்ளன. பார்ப்பதற்கு படித்த நடுத்தரக் குடும்பத்துப் பெண் போல் இருக்கும் தேவி பெண் பயணிகள் பக்கத்தில் அமர்ந்து நட்பாகப் பழகி அவர்கள் கவனம் சிதறும் நேரத்தில் திருடி வந்துள்ளார்.
ரயில் பயணிகள் கவனத்தைத் திசை திருப்பி திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் வேறு யாரும் உள்ளனரா? என்று கைது செய்யப்பட்ட தேவியிடம் எழும்பூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் தேவி மீது ஐபிசி பிரிவு 379-பிரிவின் கீழ் ( திருட்டு) வழக்குப் பதிவு செய்து, அவரை எழும்பூர் 14-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT