Published : 18 Nov 2019 05:53 PM
Last Updated : 18 Nov 2019 05:53 PM
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் கயிறு ஏறும் போட்டியில் கலந்துகொண்ட இளைஞர்கள் தவறி கீழே விழுந்ததில் இரண்டு இளைஞர்களுக்கு இடது கை எலும்பு முறிந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை ஆண், பெண் காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதித் தேர்வு தற்போது சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இன்று காலையிலிருந்து நடந்துவரும் உடல் தகுதித் தேர்வில் உயரம், எடை, மார்பளவு அளக்கப்பட்டு உயரம் தாண்டுதல், ஓட்டம், நீளம் தாண்டுதல், கயிறு ஏறும் போட்டி உள்ளிட்ட உடல் திறனை நிரூபிக்கும் பல போட்டிகள் நடக்கின்றன. இதில் தேர்ச்சி அடைபவர்களின் மதிப்பெண், பணியில் தேர்வு செய்வதற்கு ஒரு தகுதியாக அமையும் என்பதால் பலரும் முன்னரே பயிற்சி எடுத்து கலந்து கொண்டனர்.
கோப்புப் படம்
பயிற்சி இல்லாமல் அந்த நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என கலந்து கொள்பவர்களும் உண்டு. இன்று நடந்த போட்டியில் கயிற்றைப் பிடித்து ஏறும் போட்டியில் இளைஞர்களின் தோள் வலிமை சோதிக்கப்பட்டது.
இதில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் (23) என்கிற இளைஞரும், கொளத்தூர் ஜிகேஎம் காலனியைச் சேர்ந்த பாலாஜி (25) என்கிற இளைஞரும் கலந்து கொண்டனர். இருவரும் கயிறு ஏறும் போட்டியில் ஏறும்போது கைப்பிடி தவறி கீழே விழுந்தனர். இருவருக்குமே இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு பொதுமருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT