Published : 18 Nov 2019 02:53 PM
Last Updated : 18 Nov 2019 02:53 PM
அரிசி வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட ஏடிஎம்மை உடைத்து பணம் திருடலாம் என முடிவு செய்த நெற்குன்றத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும்போது போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
சென்னை ஜெ.ஜெ.நகர், மின்வாரிய அலுவலக சாலையில் உள்ள ஆந்திர வங்கிக் கிளை ஏடிஎம்மில் இயந்திரத்தை உடைத்து ஒரு நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது அதன் தலைமை அலுவலகத்தில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஜெ.ஜெ.நகர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த ஜெ.ஜெ.நகர் போலீஸார் அங்கு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். அவர் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய இயந்திரம், கையுறை, ஸ்க்ரூ ட்ரைவர், கத்தி, கட்டர் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். அந்த இளைஞரைக் கைது செய்த போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் சென்னை நெற்குன்றம், கிருஷ்ணா நகரில் வசிக்கும் சிலம்பரசன் (30) எனத் தெரியவந்தது. டிப்ளமோ படித்த பட்டதாரியான இவர் சொந்தமாக அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. அதை ஈடுபட்ட எடுத்த முயற்சிகள் மேலும் கடனாளியாக்கியுள்ளது.
''ரூ. 6 லட்சம் வரை கடன் ஆனதால் செய்வதறியாமல் திகைத்தேன். கடனாளிகள் நெருக்கடி காரணமாக நஷ்டத்தை ஈடுகட்ட ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருடலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஜெ.ஜெ.நகர், மின்வாரிய அலுவலக சாலையில் உள்ள ஆந்திர வங்கிக் கிளை ஏடிஎம் ஆளரவம் இல்லாத இடமாக இருந்ததால் அந்த ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டேன்.
ஏடிஎம் மையத்தில் கண்காணிப்பு கேமரா இருக்கும். அதனால், முகத்தை மூடி அடையாளம் தெரியாதவண்ணம் பணத்தைத் திருடலாம் என்று நினைத்தேன். ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தேன். இயந்திரத்துக்கும் தலைமை அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியாது. அதனால் சிக்கிக் கொண்டேன். உழைத்து வாழ முடிவு செய்து பார்த்தேன். ஆனால் தொடர்ந்து நஷ்டம், பண நெருக்கடி காரணமாகவே இந்த முடிவுக்கு வந்தேன்'' என சிலம்பரசன் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT