Published : 18 Nov 2019 08:21 AM
Last Updated : 18 Nov 2019 08:21 AM
ஆண்டுதோறும் பல்வேறு போட்டித் தேர்வுகளை, புகார்கள், குறைகளுக்கு இடமின்றி, மிக நேர்த்தியாக நடத்தி தொழிற்முறை நிபுணத்துவத்தை (professionalism) தொடர்ந்து நிரூபித்து வருகிறது டிஎன்பிஎஸ்சி.
தற்போது, குரூப் 2 பணிக்கான ‘நேர்காணல்' தேர்வு நடைபெற்று வருகிறது. 1000 பணியிடங்கள் - சுமார் 2000 பேருக்கு அழைப்பு.
ஆமாம்..., ‘நேர்காணல்' முறை தேவைதானா...?
முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் கிறிஸ்துதாஸ் காந்தி போன்றோர், நேர்காணல் முறைக்கு எதிராகப் பலமுறை குரல் கொடுத்து இருக்கிறார்கள். சுமார் அரை மணி நேரப் பொழுதில், ஒருவரின் தகுதி, திறனை, எடை போட்டு விட முடியுமா..?
2017 ஆகஸ்ட்15 - சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, ‘‘இரண்டு நிமிடங்களில் ஒரு மனிதனை மதிப்பீடு செய்ய முடிகிற உளவியல் நிபுணரை நான் பார்த்ததே இல்லை. ஊழலுக்கு இடம் தருகிற தளங்களில் ஒன்று - பணியமர்வு நடைமுறை. ‘நேர்காணல் பகுதியில் உள்ள ஊழல் காரணமாக, தங்கள் வேலைவாய்ப்பை இழந்து விடுகின்றனர் பலர்'' என்றார்.
டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதளம் கூறுகிறது:
எழுத்துத் தேர்வு, வாய்வழித் தேர்வு இரண்டும் கொண்ட பணி களுக்கு நபர்களைத் தேர்ந்தெடுக்க, டிஎன்பிஎஸ்சியில், ‘வாய்வழித் தேர்வுத் துறை' (Oral Test Department) இருக்கிறது.
வாய்வழித் தேர்வு நாளன்று, தேர்வர்களின் மூல சான்றிதழ்கள் சரி பார்க்கப்படும்; பலவகைப் பணி யிடங்களுக்கான தேர்வு எனில், தேர்வர்களின் விருப்பங்கள் பெறப் படும்; முடிவில், ஒருங்கிணைக் கப்பட்ட மதிப்பெண் பட்டியல் (Consolidated Mark List (CML) தயாரிக்கப்படும்.
எல்லாம் சரிதான். ஆனால்.... வாய்வழித் தேர்வின்போது தேர்வர்களிடம் என்ன எதிர்பார்க்கப் படுகிறது...? இதற்கு எந்த பதிலும், தெளிவும் எங்கும் இல்லை.
ஏற்கெனவே எழுத்துத் தேர்வில் அறிவுத் திறன் சோதிக்கப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றுதான் நேர்காணலுக்கு வருகிறார்கள்.
நன்னடத்தை, அர்ப்பணிப்புணர்வு, நடு நிலையான பார்வை, மனிதா பிமான அணுகுமுறை ஆகியன இருக்கின்றனவா என்று சோதிக்கப் போகிறார்களா...? என்னதான் கேட்டு, எப்படித்தான் தேர்வு செய்யப் போகிறார்கள்...?
திடமான தீர்க்கமான வழிமுறை இருக்கிறது என்றால், அது என்ன என்று தேர்வர்களுக்கு சொல்லப்பட வேண்டாமா...?
ஒரு நபருக்கு 29; மற்றவருக்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்படுமானால் எந்த அடிப்படையில் எந்த அளவு கோல் வைத்து இந்த வித்தியாசம் நியாயமானது ஆகும்...? யார் கேள்வி கேட்பது...? யார் பதில் சொல்வார்..?
‘தோன்றியது', அளித்தோம் என்று சொல்வதைத் தவிர, வேறு என்ன விளக்கம் இருக்க முடியும்...? எல்லாருக்கும் ஒரே நேரத்தில் தொடங்கி ஒரே நேரத்தில் முடிவடைகிறது எழுத்துத் தேர்வு.
ஆனால் நேர்காணல் அப்படி இல்லை. ஒருவர், காலையில் முதல் ஆளாக இருப்பார்; மற்றவரோ, வெளியூரில் இருந்து இரவுப் பயணம் செய்து வந்து, நாள் முழுதும் பதற்றத்துடனே அமர்ந்து விட்டு, கடைசி நபராக மாலையில் உள்ளே நுழைவார். இருவரையும் பிரித்துப் பார்க்கிற சாத்தியம் இருக்கிறதா...?
கடந்த சில நாட்களாக, ‘மாதிரி நேர்காணல்' (mock interview) பயிற்சிக்கு வருகிற, பெரும்பாலான தேர்வர்களுக்கு ஏற்படும் ஐயங் களும், ‘விற்பன்னர்கள்' தருகிற விளக்கங்களும், அதிர்ச்சி தருவன.
என்ன உடை அணியலாம்..? ‘போர்டு' உறுப்பினர்களுக்கு எவ்வாறு வணக்கம் தெரிவிப்பது..? நாற்காலியில் எப்படி அமர்வது..? ‘தெரியாது' என்று பதில் கூறலாமா கூடாதா..? ‘உண்மை'யைப் பேச லாமா..? அடைமொழி இல்லாமல் தலைவர்களின் பெயர் சொல்ல லாமா..? எத்தனை கேள்விகள்! என்ன வொரு பரிதாப நிலை!
இவை குறித்து கவலைப்பட வேண்டாம்; இதுதான் எமது எதிர்பார்ப்பு என்று தெளிவாக அறி விப்பதில் என்ன சங்கடம் இருக் கிறது...?
நேர்காணல் எனப்படும் வாய்வழித் தேர்வு இருந்துதான் ஆகவேண்டும் என்றால், வருகிற தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நிர்வாகமே வகுப்பு, விளக்கம், வழிகாட்டுதல் தந்து உதவலாமே...?
அதிகார வர்க்கத்தின் அர்த்தமற்ற அணுகுமுறைக்கு வலு சேர்ப்பதைத் தவிர, நேர்காணல் முறை என்ன சாதித்துவிடப் போகிறது...?
எத்தனை முறை சொன்னாலும் இதுதான் உண்மை - ‘பயிற்று விக்கப்படுகிற' தேர்வர்களுக்கு, ஏற்கெனவே அதிகார வர்க்கத் துடன் ‘உறவு' இருக்கிறவர்களுக்கு, ‘நேர்காணல்' நிச்சயமாக சாதகம்;
‘யாரையும்' அறியாத. ‘பேசத் தெரியாத' முதல் தலைமுறை, கிராமத்துப் பட்டதாரிகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்; பாதகம்.
என்ன நடக்கும்... எப்படித் தேர்வு செய்யப்படுவோம்... ஒருவருக்கு மதிப்பெண் கூடவோ குறையவோ என்ன காரணம் என்று தெரிந்து கொள்கிற உரிமை, தேர்வர்களுக்கு இருக்கிறதா இல்லையா...? சற்றும் ஐயத்துக்கு இடமின்றி மிகத் துல்லியமாகத்தான் மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை எவ்வாறு உறுதி செய்து கொள்வது...?
டிஎன்பிஎஸ்சியின் நேர்மையான செயல்பாட்டில், நமக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. அதையே இன்னமும் சிறப்பானதாக செய்யலாமே... ஏன் கூடாது..?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT