Published : 17 Nov 2019 05:39 PM
Last Updated : 17 Nov 2019 05:39 PM

இந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்:  இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து வைகோ கருத்து

புதுடெல்லி

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதையடுத்து இந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று 17.11.2019 ஞாயிற்றுக்கிழமை, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்த நாள் மனதுக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தருகின்ற நாளாக அமைந்துவிட்டது. இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து, 90 ஆயிரம் விதவைகளைக் கண்ணீரில் தவிக்க விட்டு, எண்ணற்ற இளம் பெண்களை நாசப்படுத்தி, பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராமல், வயதானவர்கள் என்றும் பாராமல் இனப்படுகொலை செய்து, இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் எங்கே சென்றார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத நிலைக்குக் காரணம் மகிந்த ராஜபக்சே என்று சொன்னால், முழுக்க முழுக்க அதை இயக்கியது ராணுவ அமைச்சராக இருந்த கோத்தபய ராஜபக்சே.

கொத்தபய ராஜபக்சேவின் கைகளில் தமிழர்கள் இரத்தம் காயாமலேயே இருக்கிறது.

நடந்து முடிந்திருக்கக்கூடிய தேர்தலில், தமிழர்கள் சஜித் பிரேமதேசாவுக்குத்தான் அதிகமான வாக்குகளைத் தந்திருக்கிறார்கள். இன்னும் அழிவு வருமே! ஆபத்து வருமே! என்ற கவலையில் தந்திருக்கிறார்கள். மகிந்த ராஜபக்சேவின் சகோதரன் கொத்தபய ராஜபக்சே வந்துவிட்டால் கொத்துக் கொத்தாக இன்னும் கொலை செய்வதற்குத்தானே காத்திருப்பான் என்ற வேதனையில் வாக்களித்திருக்கின்றார்கள்.

ஆனால் சிங்கள வெறியர்கள் மத்தியில், வெறித்தனத்தை ஊட்டி வருகின்ற கொத்தபய ராஜபக்சே கூட்டம் வெற்றி பெற்றிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது.

அதே நேரத்தில் தமிழர்கள் தங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தையும், ஏற்பட இருக்கின்ற ஆபத்தையும் எண்ணி தங்களை பாதுகாத்துக்கொள்ள எது நல்லது என்பதைப் பற்றி தீர்மானித்தற்காக இந்த வேதனையான நேரத்திலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்திய அரசுக்கு பொறுப்பு அதிகம் இருக்கிறது. காணாமல் போன இலட்சக்கணக்கான தமிழர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. இலட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்கவில்லை. படுகொலைகளைச் செய்து, கோர நர்த்தனமாடிய கொலைபாதகன்தான் கொத்தபய ராஜபக்சே. எனவே இந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்.

எதிர்காலத்தில் தமிழர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டும்.

சீனத்தோடும், பாகிஸ்தானோடும் உறவாடிக்கொண்டே, இந்தியாவையும் ஏமாற்றி, தமிழர்கள் அடையாளமே இல்லாமல் செய்வதற்கு என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்வதற்கு கொத்தபய ராஜபக்சே துடித்துக்கொண்டுதான் இருப்பார். அதைத் தடுக்க வேண்டிய கடமை உலகத் தமிழினத்துக்கு உண்டு; தாய்த் தமிழகத்தில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு உண்டு; தமிழ் இளைஞர்களுக்கு உண்டு.

எத்தனையோ அழிவுகளைச் சந்தித்துவிட்டோம். எத்தனையோ இழப்புகளைச் சந்தித்துவிட்டோம். அதனால் நாம் அஞ்ச வேண்டியது இல்லை. கவலைப்பட வேண்டியது இல்லை. நம்பிக்கையோடு நம் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு, மனிதகுல மனசாட்சியின் கதவுகளைத் தட்டுவதற்கு தொடர்ந்து நம்முடைய கடமைகளைச் செய்வோம்.

செய்தியாளர்: இந்தப் படுகொலைகளுக்கு சர்வதேச அரங்க நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருக்கக்கூடிய நிலையில், அந்த வழக்குகளின் நிலைமை எப்படியாகும் என்று நினைக்கிறீர்கள்?

வைகோ: நீதி ஒரு நாள் எப்படியும் கிடைக்கும். உண்மை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வந்துதான் தீர வேண்டும். நூறு ஆண்டு கடந்தும் அர்மீனியர்கள் இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். நடந்த படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இருக்கின்றன. இசைப்பிரியா படுகொலை, சானல்-4 சாட்சியங்கள் இவை எல்லாம் மறைக்க முடியாதவை. இந்தச் சாட்சியங்கள் நம்முடைய நியாயத்தை நிச்சயமாக சர்வதேச சமுதாயத்தின் மனசாட்சியிடம் எடுத்து வைக்கும். அதற்குரிய சூழல் உருவாகும் என்று நான் நம்புகின்றேன்.

செய்தியாளர்: பா.ஜ.க. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. முதல் முறை வரும்போதே மீனவர் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என்று சொன்னார்கள்....?

வைகோ: மீனவர்களைக் கைது செய்வது, அவர்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம் விதிப்பது, ஆண்டுக் கணக்கில் சிறையில் அடைப்பது என்ற கொடூரமானச் சட்டத்தை இலங்கை அரசு கொண்டுவந்தபோது, நேரடியாகவே வந்து மத்திய அரசிடம் முறையிட்டும்கூட, அதைத் தடுப்பதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வளவு கொடூரமான சட்டத்தை அங்கே இலங்கை அரசு கொண்டுவந்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கே வந்து அடிக்கின்றான், சுடுகின்றான், கொல்கிறான், கைது செய்து கொண்டு சென்று சிறையில் அடைக்கின்றான். தாங்க முடியாத இலட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கின்றான், வருடக் கணக்கில் சிறைத் தண்டனை என்கிறான். இதைவிட என்ன கொடுமை இருக்க முடியும்? இதைத் தடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் மத்திய அரசு அந்தக் கடமையைச் செய்யவில்லை.

இவ்வாறு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x