Published : 15 Nov 2019 04:22 PM
Last Updated : 15 Nov 2019 04:22 PM
தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (நவ.15) வெளியிட்ட அறிக்கையில், "காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது. ஆனால், மத்திய அரசு கர்நாடகத்திற்கு ஆதரவாக விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளித்து தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து வருகிறது.
இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.
தென்பெண்ணை ஆறு பெங்களூருவில் உற்பத்தியானாலும், 432 கி.மீ. நீளமுள்ள இந்த ஆறு கர்நாடகாவில் 110 கி.மீ. தூரமும், தமிழகத்தில் 320 கி.மீ. தூரமும் பாய்கிறது. இந்த ஆற்றின் நீரைக் கொண்டு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனமும், 5 மாவட்டங்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆறு கர்நாடகாவை விட தமிழகத்தில் அதிக நீளம் பாய்வதால் தமிழகத்திற்கு இருக்கிற உரிமையை எவரும் மறுக்க முடியாது.
இந்நிலையில், கர்நாடக அரசு 1892 ஆம் ஆண்டு மேற்கொண்ட நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, தென்பெண்ணை ஆற்றில் குடிநீர்த் தேவைக்கு என்று கூறி கர்நாடகா அணை கட்டுவதை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது தமிழகத்தை கடுமையான பாதிப்புக்கு ஆளாக்க நேரிடும். இந்த அணையைக் கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதியைப் பெறாமல், மத்திய அரசின் நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை எந்த அடிப்படையில் அனுமதி வழங்கியது எனத் தெரியவில்லை. இந்த அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ?
தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற நிலையில் தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கிய போதே தடுத்து நிறுத்தத் தவறியதன் விளைவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தமிழகம் ஆளாகியுள்ளது. இதற்கு தமிழக அரசின் அலட்சியமும், பொறுப்பற்ற போக்கும் தான் காரணமாகும்.
எனவே, தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கிற வகையில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனுவை தாக்கல் செய்து, நியாயமான தீர்ப்பை பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்," என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT