Published : 15 Nov 2019 02:47 PM
Last Updated : 15 Nov 2019 02:47 PM

இலங்கை அதிபர் தேர்தல்: ஈழத் தமிழர்களுக்கு வைகோ வேண்டுகோள்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

தமிழ் இனத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஈழத்தமிழர்கள் வாக்கு அளிக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (நவ.15) வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் நவம்பர் 16 ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதை ஆராய்ந்து ஈழத்தமிழர்கள் வாக்கு அளிக்க வேண்டும்.

ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்களை மகிந்த ராஜபக்சே கொன்று குவித்தபோது, உடந்தையாகச் செயல்பட்ட கோத்தபய ராஜபக்சே தேர்தலில் போட்டியிடுகின்றார்.

ஈழத்தமிழர் இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சே, பன்னாட்டு நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய நபர் ஆவார். அவரது தம்பி கோத்தபய ராஜபக்சே உத்தரவின்பேரில்தான் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று ஒழிக்கப்பட்டனர்.

பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் வயது முதிந்தவர்களைக் கொன்று குவித்த கோத்தபய ராஜபக்சேதான், 90 ஆயிரம் தமிழ்ச் சகோதரிகள் கணவனை இழந்து தவிப்பதற்கும், இறுதிப் போரின்போது தஞ்சம் அடைந்த பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளை வதை முகாம்களில் அடைத்து வைத்து, கொடூரச் சித்ரவதை செய்து கொன்று வீசியதற்கும், தமிழர்களின் தாயகப் பகுதிகளான வடக்கு-கிழக்கு பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றத்திற்கும், சிங்கள ராணுவம் தமிழர்களின் நிலம் உள்ளிட்ட சொத்துகளைக் கைப்பற்றிக் கொண்டு, தாய் மண்ணிலேயே அகதிகளாகத் தமிழர்கள் அலையும் கொடுமைக்கும் காரணம்.

எனவே, வாக்குச் சாவடிக்குப் போகும் முன்பு, ஈழத்தமிழ் வாக்காளர்கள், தமிழ் இனத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு வாக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்" என வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x