Published : 15 Nov 2019 12:24 PM
Last Updated : 15 Nov 2019 12:24 PM
மதுரை
உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கும் முன்பே மதுரை அதிமுகவில் மேயர் வேட்பாளர் சீட் பெற, கட்சியில் உள்ள அதிகார மையங்களுக்கு இடையே சத்தமில்லாமல் போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், மேயர் வேட்பாளராகும் கனவில் இருந்த கட்சியின் மற்ற நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் ஆண், பெண் இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், மதுரை உட்பட தமிழகத்தின் 15 மாநகராட்சி மேயர் வேட்பாளர்களுக்கான ஆண், பெண் இடஒதுக்கீடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு, உள்ளாட்சித்தேர்தல் நடப்பதாக இருந்தநிலையில் மதுரை மாநகராட்சி மேயர் பதவி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளையும் சேர்த்து, 15 மாநகராட்சிகளுக்கு மறுபடியும் ஆண், பெண் இடஒதுக்கீடு செய்ய மறுசீரமைப்பு நடக்கிறது. உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்பதற்கு முன் கடைசி நேரத்தில் மாநகராட்சி மேயர்களுக்கான ஆண், பெண் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட உள்ளதாக ஆளும்கட்சியினர் கூறுகின்றனர்.
ஒரு தரப்பினர், டிசம்பர் மாதம் பள்ளிகளின் அரையாண்டு தேர்வு முடிந்தப்பின் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்றும், மற்றொரு தரப்பினர் கடந்த ஆண்டை போல் பொங்கல் பரிசு தமிழக அரசு சார்பில் வழங்கிய பின் ஜனவரியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே மதுரை அதிமுகவில் மேயர் வேட்பாளர் ‘சீட்’டை கைப்பற்றுவதற்கு கட்சியில் முக்கிய அதிகார மையங்களுக்கு இடையே சத்தமில்லாமல் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுகவினர் கூறியதாவது:
மதுரை மாநகராட்சியில் மாநகர மாவட்ட அதிமுகவில் 80 வார்டுகளும், புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுகவில் 20 வார்டுகளும் அமைந்துள்ளன. இந்த வார்டுகளுக்கான கவுன்சிலர் வேட்பாளர்களை மாநகருக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும், புறநகர் கிழக்கு மாவட்டத்துக்கு ராஜன் செல்லப்பா எம்எல்ஏவும் முடிவு செய்வார்கள். ஆனால், மேயர் வேட்பாளரை மாநகர் செயலாளர் செல்லூர் ராஜூ பரிந்துரை அடிப்படையில் கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். தற்போது வரை மேயர் பதவி ஆண்களுக்கா, பெண்களுக்கா என்பது முடிவு செய்யப்படவில்லை. ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டால் செல்லூர் கே.ராஜூ தன்னுடைய ஆதரவாளர் ஒருவருக்கு பெற்றுத் தர வாய்ப்புள்ளது. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால் செல்லூர் கே.ராஜூ, தன்னுடைய குடும்பத்தில் உள்ள ஒருவரை பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
அதேநேரம், விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏவும், தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மேயர் வேட்பாளராக்க முயற்சித்து வருகிறார். மக்களவைத் தேர்தலில் தன்னுடைய மகனின் தோல்வியை மேயர் தேர்தல் மூலம் சரிகட்ட அவர் பார்க்கிறார்.
அதேபோல், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் தனது ஆதரவாளர் ஒருவரை மேயர் வேட்பாளராக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
மேயர் ‘சீட்’க்கு அதிமுகவின் முக்கிய அதிகார மையங்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளதால் கட்சியில் மேயர் வேட்பாளராகும் கனவில் இருந்த இரண்டாம் கட்ட முன்னணி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனாலும், அவர்களும் பல முனைகளில் மேயர் வேட்பாளராவதற்கு முயற்சி செய்து வருகின்றனர் என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT