Published : 15 Nov 2019 11:31 AM
Last Updated : 15 Nov 2019 11:31 AM
நதிநீர் பங்கீட்டு உரிமைகள் தமிழக அரசுக்கு முன்னுரிமை இல்லை. இந்த அரசின் அமைச்சர்களும், முதல்வரும் வேறு பங்கீட்டில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள் என திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக துரைமுருகன் இன்று (நவ.15) வெளியிட்ட அறிக்கையில், "தென்பெண்ணையாற்றின் குறுக்கே ஐந்து நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் தமிழகத்தில் தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிந்தும், உச்ச நீதிமன்றத்தில் முறையாக வாதிடாமல் தமிழக அரசு தோற்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக நலன் சார்ந்த எந்தப் பிரச்சினையிலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் ஆகும் எந்த வழக்குகளிலும் தமிழக அரசோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களோ எந்த கவனமும் செலுத்துவதில்லை. தொடர்புடைய வழக்கறிஞர்களை சந்தித்து அவர்களுடன் வழக்கு தொடர்பாக விவாதிப்பதும் இல்லை. கலந்து பேசுவதும் இல்லை.
இதன் விளைவாக தமிழகம் தனது ஜீவாதார உரிமைகளை பல வழிகளில் இழந்திருக்கிறது. குறிப்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், "காவிரி நதிநீர் வாரியம் அமைக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையாக வாதிடாமல் கோட்டை விட்டது. அதனால் வலுவான வாரியத்திற்குப் பதில் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஒரு பல் இல்லாத மேலாண்மை ஆணையம்- அதுவும் மேற்பார்வை செய்யும் குழு போல் கிடைத்தது.
அதே போல், இப்போது தென்பெண்ணையாறு விவகாரத்திலும் உரிய முறையில் தமிழக அரசு வாதத்தை எடுத்து வைக்காமல் தமிழகத்தின் நதிநீர் உரிமையை தாரை வார்த்து இருக்கிறது.
தமிழக மக்களின் உயிர் நாடி பிரச்சினையான - நதிநீர் தொடர்பான வழக்குகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டாமல் இருப்பதும், குறைந்தபட்சம் அந்த துறை அமைச்சர் என்ற அடிப்படையில் வழக்குகளில் கவனம் செலுத்தாமல் இருப்பதும் தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கி வருகிறது.
நதிநீர் பங்கீட்டு உரிமைகள் இந்த அரசுக்கு முன்னுரிமை இல்லை. இந்த அரசின் அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும் வேறு பங்கீட்டில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள்.
ஆகவே உடனடியாக முதல்வர், நேரடியாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு, உச்ச நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, தமிழகத்தின் நதிநீர் உரிமையை நிலைநாட்டி, ஐந்து மாவட்ட மக்களுக்கான பாதிப்பை நீக்கவும், கர்நாடக பாசனத் திட்டங்களைத் தடுத்து நிறுத்திட விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT