Published : 14 Nov 2019 06:13 PM
Last Updated : 14 Nov 2019 06:13 PM
உதகையில் மருத்துவக் கல்லூரி அமைய நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள மக்களவை திமுக உறுப்பினர் ஆ.ராசா, ஜெயலலிதா இருந்திருந்தால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மருத்துவக் கல்லூரி சாத்தியமாகி இருக்காது எனத் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாநில அரசு அதற்காக நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், உதகையில் மருத்துவக் கல்லூரி அமைக்க முயற்சி மேற்கொண்ட நீலகிரி எம்.பி. ஆ.ராசாவுக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் உதகையில் இன்று (நவ.14) பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவில், நீலகிரி எம்.பி. ஆ.ராசா பேசியதாவது:
"உலக சுகாதார நிறுவனம் பிரசவ காலத்தில் தாய் மற்றும் சேய் மரணங்களை அளவீடு செய்து வருகிறது. இதனடிப்படையில் உலக வங்கி மத்திய அரசுடன் இணைந்து இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் 75 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க முடிவு செய்தது. இதில், 4 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இந்தப் பட்டியலில் நீலகிரி மாவட்டம் இடம் பெறவில்லை. நீலகிரி மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டம் என்பதாலும், இங்கு வசிப்பவர்களின் மருத்துவத் தேவையை கருத்தில் கொண்டும் நீலகிரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.
அவர், சுகாதாரத் துறை மாநிலங்களின் பட்டியலில் உள்ளதால், மாநில அரசிடம் நீலகிரி மாவட்டத்தைச் சேர்க்க வலியுறுத்துங்கள் எனத் தெரிவித்தார். மாநில சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்தித்து, இதைத் தெரிவித்தேன். மாநில அரசு நீலகிரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி கட்ட அனுமதி வழங்க, மத்திய அரசை வலியுறுத்தியது. அனுமதி கிடைத்ததும், தற்போது நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்.
ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால், அரசியல் காழ்ப்புணர்ச்சியால், எனது கோரிக்கையை நிராகரித்திருப்பார். உதகையில் மருத்துவக் கல்லூரிக்கு ஹெச்.பி.எஃப் பகுதியில் இடம் அளித்த கனரகத்துறை அமைச்சர், அனுமதி அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு நன்றி.
நான் மக்களின் பிரதிநிதியாக இருந்து தொடர்ந்து இந்த மாவட்டத்தின் மேம்பாட்டுக்குப் பாடுபடுவேன்".
இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT