Published : 14 Nov 2019 05:59 PM
Last Updated : 14 Nov 2019 05:59 PM
காரைக்குடி
"நடிகர்களைப் பற்றி பொதுவாகத் தான் கூறினேன். யாரைப் பற்றியும் தவறாகக் கூறவில்லை", என கதர்கிராமத் தொழில்கள் நலவாரிய அமைச்சர் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிப் புதூரில் தோட்டக்கலை சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:
முன்பெல்லாம் உழவு, நடவு என அனைத்து வேலைகளையும் விவசாயிகளே செய்தனர். இதனால் லாபம் கிடைத்தது. தற்போது அனைத்திற்கும் கூலி கொடுப்பதால் கடனாளியாகும் நிலை உள்ளது. மேலும் நாமே உழைத்ததால் சர்க்கரை நோய் போன்ற எந்த நோயும் வரவில்லை. பெண்களுக்கும் அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தை பிறந்தது.
தற்போது கர்ப்பமான பெண்களை மேடு, பள்ளத்தில் நடக்காதீங்க என்று டாக்டர்களே குழப்புகின்றனர். மேலும் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டுமென அனைவரும் நினைக்கின்றனர்.
இதில் பெண் குழந்தைகள் மட்டுமே நன்றாகப் படிக்கின்றனர். பையன்களில் 100-க்கு 3 பேர் தான் படிக்கின்றனர். சிறுவயதிலேயே மது குடிக்கின்றனர். பெரியவர்களானதும் வெளிநாட்டில் சிரமப்படுகின்றனர்.
எனது தந்தை என்னைப் படிக்க வைக்க நினைத்தார். நான் 11-ம் வகுப்பு மேல் படிக்கவில்லை. அதனால் விவசாயம் செய்ய எருமை வாங்கிக்கொடுத்தார். அதை வைத்து உழவு செய்ய முடியாமல் சிரமப்பட்டேன்.
நான் ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருக்கும் வரை சாதாரண கட்டிலில் படுத்து தூங்கினேன். அமைச்சர் ஆனதில் இருந்து ஏசி இருந்தால் தான் தூக்கம் வருது. நான் எங்கு சென்றாலும் ஏசி தான் இருக்கு. மேலும் நல்ல சம்பளம் தருகிறார்கள்; பாதுகாப்புக்கு 10 பேர் வருகிறார்கள், என்றார்.
கருத்தரங்கு பங்கற்றபின் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நடிகர்களைப் பற்றி நான் பொதுவாகத்தான் சொன்னேன். யாரைப் பற்றியும் தவறாகக் கூறவில்லை. நான் கூறிய கருத்தை முழுமையாக மீடியாக்களில் வெளியிடவில்லை. எங்களது கூட்டணியில் நடிகர் விஜயகாந்தின் கட்சியும் உள்ளது.
மொபைல் போன் இளைஞர்களை சீரழித்து வருகிறது. கல்வி சம்பந்தமான செயல்பாடுகளுக்கு மட்டுமே மொபைல் போனை பெற்றோர் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.
முன்னதாக அமைச்சர் பாஸ்கரன் நேற்று பேசும்போது, "நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் இனி எடுபடாது; விஜயகாந்த் ஆரம்பித்தார் என்னாச்சு?" என வினவியிருந்தார்.
இது விமர்சனத்துக்குள்ளான நிலையில் அப்படியே அந்தர் பல்டி அடித்து பொதுவாகத்தான் சொன்னேன். எந்த நடிகரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை எனக் கூறியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT