Published : 14 Nov 2019 05:31 PM
Last Updated : 14 Nov 2019 05:31 PM

உத்தங்குடி - கப்பலூர் விரிவாக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் டிசம்பர் முதல் 3 டோல்கேட்டில் கட்டணம் வசூல்

மதுரை

மதுரை உத்தங்குடியிலிருந்து கப்பலூர் வரையிலான 27 கிமீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் வரும் டிசம்பர் மாதம் முதல் தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பிலும் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இதனால் பயணிகள் 3 டோல்கேட்டில் கட்டணம் செலுத்தும் சூழல் ஏற்படும்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் 1999-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. அப்போது, உலக வங்கி நிதியுதவியில் ரூ. 29 கோடி மதிப்பில் உத்தங்குடியிலிருந்து கப்பலூர் வரை 27 கிமீ தூரத்திற்கு இருவழி சுற்றுச்சாலை அமைக்கப்பட்டது.

அதற்குண்டான செலவுத்தொகையை வசூலிக்க, மதுரை மாநகராட்சி சார்பில் 5 இடங்களில் டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. செலவுத்தொகையைக் காட்டிலும் டோல்கேட் மூலம் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அதற்குப் பின்னர், 2013-ம் ஆண்டு முதல் இச்சாலை மாநகராட்சியிலிருந்து மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் சார்பில் இந்த இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2017-ம் ஆண்டு ரூ. 243 கோடி மதிப்பில் தொடங்கியது.

தற்போது, விரகனூர் வைகை ஆற்றில் மேம்பாலம், அதனருகில் ரயில்வே மேம்பாலம், கப்பலூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளும் முடிந்துள்ளன.

இதில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை, மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, சேலம் கன்னியாகுமாரி தேசிய நெடுஞ்சாலை ஆகிய 4 தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கின்றன.

இதில், உத்தங்குடியிலிருந்து கப்பலூர் வரையில் 27 கிமீ தூரத்திற்குள், மஸ்தான்பட்டி, சிந்தாமணி, வலையங்குளம் ஆகிய 3 இடங்களில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கும் அறைகள், அறிவிப்புப் பலகைகள், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் முடிந்துள்ளன. வரும் டிசம்பர் மாதம் முதல் விரைவில் கட்டணம் வசூலிக்கும் பணிகள் தொடங்கவுள்ளன.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைதுறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில் உத்தங்குடியிலிருந்து கப்பலூர் வரையில் நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணி முடிந்துள்ளன.

இதில் 3 இடங்களில் டோல்கேட் அமைக்கும் பணிகளும் முடிந்துள்ளன. கப்பலூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, ரயில்வே துறையின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.

அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் டோல்கேட் அமைத்து வசூலிக்கும் பணிக்காக தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்.

இச்சாலை 18 ஆண்டுகளுக்கு பராமரிப்பு மற்றும் வசூலிக்கும் பணிக்காக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் மாதம் முதல் டோல்கேட் இயங்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலைக்கு ஒரு கட்டணம், மாநில நெடுஞ்சாலைக்கு இன்னொரு கட்டணம்..

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டோல்கேட்டில் சுங்கக் கட்டணம் செலுத்தியிருந்தாலும், உத்தங்குடி-கப்பலூர் சாலையை கடக்கும்போதும் புதிதாக கட்டணம் செலுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு திருச்சியிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் வாகன உரிமையாளர் ஒருவர், மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டணம் செலுத்தியிருந்தாலும், மஸ்தான்பட்டி மாநில நெடுஞ்சாலையை கடக்கும்போது புதிதாக கட்டணம் செலுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x