Published : 14 Nov 2019 04:32 PM
Last Updated : 14 Nov 2019 04:32 PM
மதுரை
மதுரை அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகள் கால் பராமரிப்பு பிரிவு இன்று (நவ.14) தொடங்கப்பட்டது. கால் புண் அழுகல் நோயை ஆரம்பநிலையிலே கண்டறிய பயோ திஸ்மெட்ரி (Biothesiometry) , டாப்லர் ப்ளோ ஸ்கேனும் (Doppler flow test) ஆகிய புதிய சிகிச்சை கருவிகளின் சேவையும் தொடங்கப்பட்டன.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சை துறையில், ஒரு நாளைக்கு 600 முதல் 700 பேரும் ஆண்டிற்கு மாதம் 18 ஆயிரம் பேரும் சிகிச்சைக்கு வருகிறார்கள். ஆனால், கால் பாதம் பரிசோதனை பிரிவுகள் இல்லாமல் சர்க்கரை நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை கிடைக்கவில்லை.
வெறுமனே சர்க்கரை நோயாளிகளுக்கு நோயின் வீரியத்தை கண்டறிய முடியாமல் மருந்து மாத்திரைகளை மட்டும் மருத்துவர்கள் எழுதிக் கொடுத்து வந்தனர். இந்த மருத்துவம் சாதாரண சர்க்கரை நோயாளிகளுக்கு பலன் கொடுக்கிறது.
ஆனால், நாள்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் குணமடையாமல் கால் புண், கால் அழுகல், சிறுநீரகம், இருதயம் மற்றும் கண் பாதிப்புகள் ஏற்பட்டன.
இதில், கால் புண், கால் அழுகல், கால் நரம்பு மற்றும் கால் ரத்தக்குழாய்கள் அடைப்பை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க சர்க்கரை நோய் துறையில் பயோ திஸ்மெட்ரி (Biothesiometry) கால் பாதம் உணர்ச்சியை கண்டறியும் கருவி, கால் ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்புகளைக் கண்டறியும் டாப்லர் ப்ளோ ஸ்கேனும்(Doppler flow test) தொடங்கப்பட்டது. ஆட்சியர் டிஜி வினய், ‘டீன்’ சங்குமணி பார்வையிட்டனர்.
இதுகுறித்து சர்க்கரை நோய் துறை உதவிப்பேராசிரியர் ராகவன் கூறுகையில், ‘‘சர்க்கரை நோய் வந்துவிட்டாலே கால்களில் புண் வராமல் பாதுகாக்க வேண்டும். எந்த ஒரு பாதிப்பும் முதலில் கால்களில்தான் தெரியும். உணர்ச்சி இழப்பது, தடிப்பது, பாதம் வெடிப்பது போன்ற அறிகுறிகள் தென்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் ஏற்படும் பாதிப்புகளில் மிகவும் ஆபத்தானது புண்.
சாதாரண நபர்களுக்கு புண் வந்தால் ஒரு வாரம் முதல் அதிகப்பட்சம் 2 வாரத்தில் ஆறிவிடும். மூன்று வாரங்களையும் தாண்டி ஒரு புண் ஆறாமல் இருந்தால் அது ஆறாத புண். அந்த ஆறாத புண் எந்த காரணங்களுக்காக ஆறாமல் இருக்கிறது என்பதை சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக கண்டறிய வேண்டும்.
பொதுவாக ஆறாத புண் நாள்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்குதான் வரும். இதை வரும் முன் தவிர்க்க வேண்டும். அதற்குதான், இந்த பரிசோதனை கருவியையும், ஸ்கேனையும் கொண்டு யார், யாருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம்.
இதில், கால் உணர்ச்சி மற்றும் ரத்த ஓட்டம் பரிசோதனை செய்து பார்க்கப்படும். தினமும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரண்டு கால் பாதங்களையும் தூங்குவதற்கு முன் பார்க்க வேண்டும்.
வெட்டு காயம், வீக்கம், அடிப்பட்டு புண் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். தொடு உணர்ச்சியை பார்க்கனும். நாள்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு கூர்மையான பொருள், கல், ஆணி காலில் குத்தினால் வலி, உணர்ச்சி தெரியாது. வீக்கம், புண் ஏற்பட்டுவிடும். கால் இடுக்குகளில் எப்போதும் உலர்ந்த தண்மை காணப்பட வேண்டும்.
பிசுபிசு தன்மை இருந்தால் நோய் தொற்று ஏற்படும். அதனால், கால் இடுக்குகளை தினமும் சுத்தம்செய்து உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். அதுபோல், நகம் வெட்டும்போது சதையில் வெட்டுப்பட்டால் தெரியாது. நாள்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு ஷூ, செறுப்பு மற்றும் கால் உறை இருக்கமாக போடக்கூடாது. அப்படியிருந்தால் உராய்வு ஏற்பட்டு தொடு உணர்ச்சி குறைந்து புண் ஏற்படும். செறுப்பு போடுவதற்கு முன், செறுப்பில் கல், கூர்மையான பொருட்கள் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
6 மாதத்திற்கு ஒரு முறை காலில் தொடு உணர்ச்சி இருக்கிறதா என்பதை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்பு மற்றும் ரத்த குழாய் பாதிப்பால் கால் அழுகிவிடும். அந்த நிலையை அடைந்துவிட்டால் கால் நரம்பையோ, அந்த பகுதியை வெட்டிக் எடுக்க வேண்டிய இருக்கும், ’’ என்றார்.
விஜயபாஸ்கருக்கு மட்டும் முக்கியத்துவம்
‘டீன்’ சங்குமணி, விஜயபாஸ்கர் சிபாரிசு அடிப்படையிலே தான் படித்த, பேராசிரியராக இருந்த மதுரை அரசு மருத்துவமனையிலே ‘டீன்’னாக நியமிக்கப்பட்டார். அந்த விஸ்வாசத்திற்காகவோ என்னோவோ, மருத்துவமனை சர்க்கரை நோய் துறையில் நடந்த சர்க்கரை நோய் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் படத்தை மட்டும் போட்டு சிறியளவில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் டிஜி.வினய் படமும், முதலமைச்சர், துணை முதலமைச்சர், உள்ளூர் அமைச்சர்கள் படங்களும் அந்த பேனரில் இல்லை. மருத்துவமனையில் இதுபோன்ற தனி மனித துதிபாடும் பேனர் கலாச்சாரத்தை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் யாரும் ரசிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT