Last Updated : 24 Aug, 2015 08:41 AM

 

Published : 24 Aug 2015 08:41 AM
Last Updated : 24 Aug 2015 08:41 AM

சென்னை மண்டலத்தில் கூடுதலாக 5 ஆயிரம் அஞ்சலக ஏடிஎம் கார்டுகள்: ஒரே மாதத்தில் வழங்க அஞ்சல் துறை முடிவு

சென்னை மண்டலத்தில் கூடுதலாக 5 ஆயிரம் அஞ்சலக ஏடிஎம் கார்டுகளை ஒரே மாதத்தில் வழங்க இந்திய அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 15 முக்கிய அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டன. சென்னை மண்டலத்தில் மட்டும் அண்ணா சாலை, மயிலாப்பூர், தாம்பரம், பரங்கிமலை உள்ளிட்ட 5 தலைமை அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த மையங்களில் ஆயிரம் பேர் ஏடிஎம் கார்டுகளை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தமிழக அஞ்சல் வட்டம் கூடுதலாக 90 அஞ்சலக ஏடிஎம் மையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. அதில், 20 அஞ்சலக ஏடிஎம் மையங்கள் சென்னை மண்டலத்துக்குட்பட்ட இடங்களில் அமைக்கப்படவுள்ளன. அஞ்சலக ஏடிஎம்முக்கு கிடைத்துள்ள வரவேற்பின் அடிப்படையில் அதிக அளவில் ஏடிஎம் கார்டுகளை வழங்க சென்னை நகர மண்டல அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக் சாண்டர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

தமிழகத்தில் 15 முக்கிய அஞ்சல் நிலையங்களில் அஞ்சலக ஏடிஎம் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மண்டலத்தில் 5 இடங்களில் அஞ்சலக ஏடிஎம் மையங்கள் உள்ளன. சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் 1000 வாடிக்கையாளர்களுக்கு இதுவரை அஞ்சலக ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

அஞ்சலக ஏடிஎம் சேவையை பெற சேமிப்புக் கணக்கில் ரூ.500 இருந்தால் போதுமானது என்பதால் நிறைய பேர் அதற்காக விண்ணப்பித்து வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக 20 அஞ்சலக ஏடிஎம் மையங்கள் சென்னை மண்டலத்தில் திறக்கப்படவுள்ளன.

மேலும், சென்னை மண்டலத்தில் தற்போதுள்ள 5 ஏடிஎம் மையங்களை கணக்கில் கொண்டு ஒரு மையத்துக்கு தலா ஆயிரம் ஏடிஎம் கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x