Published : 14 Nov 2019 09:28 AM
Last Updated : 14 Nov 2019 09:28 AM
நடிகர் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வர மாட்டார். அரசியலுக்கு வருவதற்கு அவருக்கு தைரியம் இல்லை என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று அளித்த பேட்டி: நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி தமிழக முதல்வர் மிகவும் மோசமாக விமர்சித்திருக்கிறார். அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். சிவாஜிக்கு தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கியக் காரணம் எம்ஜிஆருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முயன்றதால்தான். சிவாஜி கணேசன் திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் அவரது இயக்கம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும். சிவாஜி பற்றி பேசுவதை முதல்வர் பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கிறோம். இன்னும் 2 நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச, திமுக தலைவரை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பார். நாங்குநேரியில் காங்கிரஸ் செய்த மிகப் பெரிய தவறு உள்ளூர் ஆட்களுக்கு வாய்ப்பு வழங்காமல், வெளியூர் வேட்பாளரை நிறுத்தியதுதான்.
நடிகர் ரஜினி கண்டிப்பாகஅரசியலுக்கு வரமாட்டார். ஒவ்வொரு படம் வெளிவரும்போதும் இதுபோன்ற கருத்தை அவர் கூறி வருகிறார். அரசியலுக்கு வருவதற்கு அவருக்கு தைரியம் இல்லை. கமலஹாசன் மிக அழகாக, யாருக்கும் புரியாத மொழியில் பேசி வருகிறார். போகப்போகத் தான் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT