Published : 13 Nov 2019 06:00 PM
Last Updated : 13 Nov 2019 06:00 PM
ஆவடி அருகே வயது முதிர்ந்த பெற்றோரை ஏமாற்றி, வீடு மற்றும் நிலத்தை தானப்பத்திரம் மூலம் பெறப்பட்ட பத்திர பதிவை அதிரடியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரத்து செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா - கலைச்செல்வி. வயது முதிர்ந்த இத்தம்பதிகளின் 3 மகள்களுக்கும் ஏற்கெனவே திருமணமாகி விட்டது.
இந்நிலையில், கலைச்செல்விக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ராஜா- கலைச்செல்வி தம்பதியினர் தங்களின் வீடு மற்றும் நிலத்தை விற்பனை செய்ய முயன்றனர். அதன் விளைவாக, வீடு, நிலத்தை வாங்க வந்த ஒருவரிடம் 35 லட்சம் ரூபாய் விலை நிர்ணயித்து, 12.80 லட்சம் ரூபாயை முன் பணமாக பெற்றனர் ராஜா -கலைச்செல்வி தம்பதியினர்.
சம்பந்தப்பட்ட வீடு மற்றும் நிலத்தை வாங்கியவருக்கு எளிதாக பத்திர பதிவு செய்துக்கொடுக்க ஏதுவாக, தன் 2-வது மகள் யமுனா பெயருக்கு பத்திர பதிவு செய்ய முயன்றனர் ராஜா- கலைச்செல்வி தம்பதியினர்.
ஆனால், அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்ற யமுனா, தன் பெற்றோரின் வீடு, நிலத்தை, தன் பெயருக்கு தான பத்திரமாக எழுதி, பத்திர பதிவு செய்து, பெற்றோரை ஏமாற்றியுள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து, ராஜா- கலைச்செல்வி தம்பதியினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் மனு அளித்தனர். அந்த மனுவை விசாரித்த, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு விதியின்படி, யமுனா பதிவு செய்த தான பத்திர பதிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின் நகலை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, நேற்று (நவ.12) மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ராஜா - கலைச்செல்வி தம்பதியிடம் ஒப்படைத்தார்.
நாகராஜன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...