Last Updated : 13 Nov, 2019 05:19 PM

1  

Published : 13 Nov 2019 05:19 PM
Last Updated : 13 Nov 2019 05:19 PM

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த 79 மாடுகள் பிடிபட்டன: மாடுகளை திரும்பப் பெற ரூ.5 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன.

இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு பொதுமக்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் ஜி.கண்ணன் உத்தரவின்பேரில், மாநகர் நல அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி சந்திப்பு, எஸ்.என். ஹைரோடு, வண்ணார்பேட்டை, டவுன் ரத வீதிகள், பேட்டை, சேரன்மகாதேவி ரோடு, பாளையங்கோட்டை மார்க்கெட், சமாதானபுரம், கே.டி.சி.நகர், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா, பெருமாள்புரம், தெற்கு புறவழிச் சாலை, அம்பாசமுத்திரம் ரோடு, நேதாஜி ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகள், பொது இடங்களில் சுற்றித் திரிந்த 79 மாடுகளை பிடித்தனர். அவற்றை 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றி, அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள கோசாலைக்கு கொண்டுசென்று, அடைத்தனர்.

பொது இடங்களில் பிடிக்கப்பட்ட கால்நடைகளை அவற்றின் உரிமையாளர்கள் திரும்பப் பெற வேண்டுமெனில், மாநகர் நல அலுவலரை தொடர்புகொண்டு கால்நடைகளை பிடித்து வாகனத்தின் மூலம் ஏற்றிச் சென்றதற்கான செலவு, பணியாளர்கள் செலவு, எரிபொருள் உட்பட குறைந்தபட்சம் கால்நடை ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் செலுத்தி, திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

கால்நடைகளை அவற்றின் உரிமையாளர்கள் தங்கள் சொந்த இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். சாலைகளில் கால்நடைகள் மீண்டும் சுற்றித் திரிவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரைக்கப்படும்.

மேலும், மாநகர் நல அலுவலர் தலைமையிலான சிறப்புக் குழுக்கள் மாநகரின் 4 மண்டல பகுதிகளில் தினமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் 18004254656 என்ற கட்ணமில் தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x