Published : 13 Nov 2019 05:12 PM
Last Updated : 13 Nov 2019 05:12 PM
சிவகங்கை
"நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் இனி எடுபடாது; விஜயகாந்த் ஆரம்பித்தார் என்னாச்சு?" என அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
சிவகங்கையில் கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான அம்மா அவசர சிகிச்சை வாகனம் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். வாகன சேவையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அவசர சிகிச்கை வாகனம் மூலம் குக்கிராமங்களிலும் கால்நடைகளுக்கு சிகிச்சை கிடைக்கும். 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைத்தால் போதும் வாகனம் வந்துவிடும்.
சிவகங்கை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும் எண்ணமே இல்லை. சிவகங்கை பாதாளச் சாக்கடைத் திட்டம் உள்ளாட்சித் தேர்தலுக்குள் முடிக்கப்படும்.
நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் இனி எடுபடாது; விஜயகாந்த் ஆரம்பித்தார் என்னாச்சு?. அதை ஏற்கனவே முதல்வர் சொல்லிவிட்டார்" என்று கூறினார்.
கால்நடை பராமரிப்பு இணை இயக்குநர் முருகேசன், துணை இயக்குநர் ராஜதிலகம், உதவி இயக்குநர்கள் முகமதுகான், ராம்குமார், கால்நடை டாக்டர் ராஜேஷ், கூட்டுறவு அச்சுத்துறை சங்கத் தலைவர் சசிக்குமார் பங்கேற்றனர்.
முன்னதாக, தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''சொன்னது யார்? அவர் அரசியலில் இருக்கிறாரா? அவர் ஒரு நடிகர். அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. கமல் போன்ற ஆட்கள் வயது உள்ளவரை நடித்து சம்பாதித்துவிட்டு வயதான பின் கட்சி ஆரம்பிக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் அரசியலில் சிவாஜிக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் பாஸ்கரன் விஜயகாந்தை ஒப்பிட்டு நடிகர்கள் அரசியலில் சாதிக்க முடியாது எனக் கூறியிருக்கிறார். தேமுதிக ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும்போது அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT