Last Updated : 13 Nov, 2019 04:57 PM

 

Published : 13 Nov 2019 04:57 PM
Last Updated : 13 Nov 2019 04:57 PM

தூத்துக்குடியில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் கடலில் விழுந்து மாயம்: தேடும் பணி தீவிரம்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹீம் ஷா (வயது 42). மீனவரான இவர் கடந்த 11-ஆம் தேதி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த சேஷய்யா (45) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சகமீனவர்கள் ஐந்து பேருடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) 25 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இப்ராகிம் ஷா, கடலில் மீன் பிடித்தபோது கால் தவறி கடலுக்குள் விழுந்து மூழ்கினார். இதுகுறித்த தகவல் கடலோர காவல்படைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலில் விழுந்து மாயமான இப்ராஹிம்ஷாவை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நாட்டுப்படகு மீனவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ரீகன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "கடலில் 25 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர் இப்ராஹீம் ஷா கடலில் தவறி விழுந்து மாயமாகியுள்ளார்.

அவரை தேடும் பணி கடலோர காவல்படையினரும், மீனவர்களும் ஈடுபட்டுவருகின்றனர். மீனவர் தவறி விழுந்ததை தொடர்ந்து திரேஸ்புரத்தில் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை. மாயமான மீனவரை உடனடியாக மீட்டு தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்" என்றார்.

இதையடுத்து மீனவர் சங்க நிர்வாகி முகமது கூறுகையில், "மீனவர்களை பாதுகாக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும் என கடந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மீனவர்களை பாதுகாக்கும் பொருட்டு இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடலில் இறந்த மீனவரின் உடல் கிடைத்தாலும், கிடைக்காமல் போனாலும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு கிடைக்கவேண்டிய நிவாரண உதவித் தொகையினை கால தாமதமின்றி அரசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x