Published : 13 Nov 2019 02:07 PM
Last Updated : 13 Nov 2019 02:07 PM

கழிவு அகற்றும் பணியின்போது உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்: அனைவருக்கும் தலைகுனிவு; ஸ்டாலின்

ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கழிவுகளை அகற்றும் பணிகளின்போது விஷவாயு தாக்குவது, மண் சரிவது உள்ளிட்ட காரணங்களால், அந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் இறப்பது தொடர்கதையாக உள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் கழிவுகளை அகற்றும் பணியின்போது மட்டும் 620 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் சார்பில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த புள்ளி விவரத்தின்படி, கழிவுகளை அகற்றும் பணியின்போது அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உயிரிழந்த 620 பேரில் 144 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று (நவ.13) தன் ட்விட்டர் பக்கத்தில், "கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் 1993 முதல், இன்று வரை 206 பேர்! இதில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு!

இதில் திமுக ஆட்சிக் காலமும் உண்டு. அரசு மட்டுமல்ல அனைவரும் சேர்ந்து இச்சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கக் கொள்கை! நவீனக் கருவிகள் உருவாக்கப்பட வேண்டும்.மனித மாண்பு பேணப்பட, நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டுமென அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்," என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x