Published : 13 Nov 2019 01:40 PM
Last Updated : 13 Nov 2019 01:40 PM
யாரும் இல்லாத இடத்தில் சண்டைக்கு அழைப்பது எப்படி வீரமாகும் என, ரஜினியை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
சீமான் இன்று (நவ.13) திருச்சியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதே?
பாஜக ஆட்சி அமைப்பதற்காக 18 நாட்கள் காத்திருந்த ஆளுநர், சிவசேனாவுக்கு ஒரு நாள் மட்டும் அவகாசம் அளித்து, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதை பழிவாங்கலாக தான் பார்க்கிறேன். இதனை திட்டமிட்டே செய்கின்றனர் என்று தோன்றுகிறது.
உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியல் தயாராகி விட்டதா?
ஏற்கெனவே தயாராகிவிட்டது. எப்போது தேர்தல் அறிவித்தாலும் போட்டியிடுவோம்.
கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா?
யாருடன் நான் கூட்டணி வைக்க முடியும்? எங்கள் தத்துவம் தனித்துவமானது. நான் தனியாகத்தான் போட்டியிட முடியும்.
தனிமரம் தோப்பாகாது என்பார்களே?
தனிமரம் தோப்பாகாது. தனித்தனி மரங்கள் சேர்ந்துத்தான் தோப்பாகும். நான் தனியாள் இல்லை. 17 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். வேதங்கள், தத்துவங்கள் எல்லாம் தனியொரு மனிதனால் சொல்லப்பட்டவைதான். என்னை நம்பி மக்கள் வாக்களிக்கும்போது நான் வெற்றியடைகிறேன். அதில் அவசரமில்லை. நான் புலி, தனியாக சென்று வேட்டையாடுவதில் தான் எனக்கு பெருமை. மக்களிடம் நம்பிக்கையில்லாததால் மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
டாடா அறக்கட்டளையிடம் பாஜக 356 கோடி ரூபாய் நன்கொடை வாங்கியுள்ளதாக கூறப்படுவது பற்றி?
பல பேரிடம் அவர்கள் நன்கொடை வாங்கியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு அமைதியாக இருக்கின்றனர். ஆனால், அக்கட்சி தலைவர்கள் ஊழலை ஒழிப்போம் என்கின்றனர். அதானி, அம்பானியிடம் நன்கொடை வாங்கவில்லையா?
பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடப்படும் என, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளாரே?
திருவள்ளுவர் இந்து என்கின்றனர். 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்து என்ற மதம் இருந்ததா? இந்தியா என்ற நாடு இருந்ததா? பால் பாக்கெட் மேல் திருக்குறள் அச்சிடுவது பெருமைதான். ஆனால், படிப்பார்களா? பாடப்புத்தகங்களில் கற்பிக்க வேண்டும். வெறும் மனப்பாடமாக அல்லாமல் கற்பிக்க வேண்டும். எங்கள் சமயத்தைத் திருடியவர்கள் இவர்கள். நாங்கள் சிவன், முருகனை வழிபடும் சைவர்கள். மாயோனை வழிபடும் வைணவர்கள். புத்தனை வழிபடும் பவுத்தர்கள். சமணர்கள். இதனை திருடி ஆங்கிலேயர்களின் சட்டத்தின் மூலம் ஏமாற்றி, எங்களை இந்துக்களாக்கி, சாதிய தீண்டாமைகளால் மதம் மாறியவர்களை இப்போது மத தீண்டாமையால் ஒடுக்குகின்றனர்.
துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வத்துக்கு அமெரிக்காவில் விருதுகள் வழங்குகின்றனரே?
கொடுக்கட்டும். நம்முள் ஒருவருக்கு விருது கொடுத்து பெருமைப்படுத்தட்டும். அதற்கு அவர் தகுதியானவராக இருக்கிறாரா என்பது வேறு. தகுதியுள்ளவர்களுக்குத்தான் விருது கொடுக்கப்படுகிறதா? அமெரிக்க அரசு அவருக்கு விருது கொடுக்கவில்லை. அங்கிருக்கும் தமிழர்கள் தான் கொடுக்கின்றனர். ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்வதில் மகிழ்ச்சி தான்.
அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு சிவாஜி நிலைமைதான் ஏற்படும் என முதல்வர் தெரிவித்துள்ளாரே?
சிவாஜியை அப்படி ஒப்பிடக் கூடாது, சிறுமைப்படுத்தக் கூடாது. தலைசிறந்த மாபெரும் நடிகர் அவர். எம்ஜிஆரிடமிருந்த எதிர்பார்ப்போ நுட்பமோ அவரிடம் இல்லை. அவர் 100-200 பாடல்கள் அண்ணாவை பற்றியே பாடியுள்ளார். சிவாஜி தோற்றுவிட்டார் என சொல்லக் கூடாது.
ரஜினி தனக்கு காவிச்சாயம் பூச முயற்சிப்பதாக கூறியிருப்பது குறித்து...
அவரது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றாரா? கொஞ்ச நேரம் கூட உறுதியாக நிற்கவில்லை. உடனேயே பத்திரிகையாளர்களை சந்தித்து மழுப்பினார்.
வயது மூப்பின் காரணமாகவே நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக முதல்வர் கூறியுள்ளது குறித்து...
அவரின் கருத்தில் முழுவதும் உடன்படுகிறேன். விஜயகாந்த் பாராட்டுக்குரியவர். கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போதே அரசியலில் தான் ஒரு மாற்றாக வருவேன் என சொல்வதற்கு துணிவு வேண்டும். நாங்கள், இரு ஆளுமைகளும் இருக்கும்போதே எதிர்த்து அரசியல் செய்தோம். இப்போது யாரும் இல்லாத இடத்தில் சண்டைக்கு அழைப்பது எப்படி வீரமாக இருக்கும்? வெற்றிடம் இல்லையென்றால் ரஜினி அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்? இது ஆளுமையா?
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...