Published : 13 Nov 2019 04:00 PM
Last Updated : 13 Nov 2019 04:00 PM
தேனி
கூடுதல் விலை கிடைப்பதற்காக ஏலக்காய்களில் செயற்கை சாயம் ஏற்றும் நிலை உள்ளது. மின்னணு ஏல மையங்களில் இவற்றை கண்டறிந்து சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் 70 சதவீத ஏலக்காய் உற்பத்தி இடுக்கி மாவட்டத்திலே விளைகிறது. சுமார் 1.30 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இதற்கான விவசாயம் நடைபெற்று வருகிறது.
இங்கு விளையும் ஏலக்காய்களை விவசாயிகளிடம் இருந்து ஏல நிறுவனங்கள் சேகரிக்கின்றன. பின்பு நறுமணப் பொருட்கள் வாரியத்தின் மின்னணு ஏல மையங்களான புத்தடி, போடி ஆகிய இடங்களுக்கு கொண்டு வந்து ஏலத்தை நடத்துகின்றன.
ஏலத்தை 12 நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் மாறி மாறி நடத்துகின்றன. ஏலம் எடுப்பதற்காக 300க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற டீலர்கள் இதில் கலந்து கொண்டு விலை நிர்ணயம் செய்வர்.
ஏலக்காயைப் பொறுத்தளவில் அதன் விலையை பச்சை நிறம், அளவு, எடை உள்ளிட்டவை தீர்மானிக்கிறது. ஏலக்காயைப் பறிக்கும் விவசாயிகள் சிலர் அதனை முறைப்படி கையாள்வது கிடையாது. இதனால் அதன் வண்ணம் சற்று மங்கிவிடுகிறது. விலை குறைந்துவிடும் என்பதற்காக சிலர் பச்சை நிற பவுடரை ஏலக்காய்களின் மேல்புறத்தில் சேர்த்து ஏலத்திற்காக அனுப்புகின்றனர்.
இதனால் சுகாதாரப்பாதிப்பு ஏற்படுவதுடன் தரநிர்ணயத்தில் குளறுபடியும் ஏற்படுகிறது. குறிப்பிட்ட தொகைக்கு ஏலம் எடுத்து அவற்றை வியாபாரிகளுக்கு விற்கும் போது தோல்நிறம் மாறி விடுவதால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே இவற்றை ஒழுங்குபடுத்தும்விதமாக மின்னணு ஏல மையங்களில் கண்ணாடி டம்ளரில் நீர் ஊற்றி அதில் விற்பனைக்கு வரும் ஏலக்காய்களின் மாதிரியை போட்டு வைக்கின்றனர்.
சாயம் கலந்திருந்தால் சிறிது நேரத்தில் நீரில் வெளியேறி தெரிந்து விடும். இதை வைத்து அந்த மாதிரி ஏலக்காய்க்கு உரிய விவசாயிகளை இனங்கண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இதுபோன்ற சாயப்பூச்சு ஏலக்காய்கள் அதிகளவில் வந்தது. தற்போது ஏல நிறுவனங்கள், நறுமணப் பொருட்கள் வாரியத்தின் கண்டிப்பினால் இதுபோன்ற நிலை வெகுவாய் குறைந்துவிட்டது.
இருப்பினும் தரத்தின் மீதான நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு நாளும் மின்னணு ஏலம் நடைபெறும் போது கண்ணாடி டம்ளர்களில் ஏலக்காய் போடப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் நிறுத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், செடியில் இருந்து ஏலக்காய்களை பறித்ததும் மண் ஒட்டிக் கொண்டிருக்கும். இதை நீரில் கழுவி காய வைக்க வேண்டும். அவ்வாறு நீரில் கழுவும் போது செயற்கை நிறமூட்டி பவுடர், ஜெல் போன்றவற்றை நீரில் போட்டு ஏலக்காயில் சாயம் ஏற்றுகின்றனர்.
இது குறித்து போடி ஸ்பைசஸ் போர்டு அலுவலகத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT