Published : 13 Nov 2019 10:51 AM
Last Updated : 13 Nov 2019 10:51 AM
மதுரை
மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள ஆர்த்தோ ‘பெட்’டுகள் (கட்டில்கள்) பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து உள்ளதால் அதற்கு செங்கல் வைத்து முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது.
செங்கல் சரிந்தாலோ அல்லது நகர்ந்தாலோ படுக்கையில் இருந்து நோயாளிகள் கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் உள்ளூர் நோயாளிகள் மட்டுமில்லாது தென் மாவட்டங்கள் முழுவதும் இருந்தும் நோயாளிகள் உயர் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகிறார்கள்.
ஆனால், மதுரையில் இருந்து நோயாளிகளை சென்னை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய முடியாது. அதனால், வரும் நோயாளிகள் அனைவரையும் திருப்பி அனுப்பாமல் மதுரை அரசு மருத்துவமனையிலே சிகிச்சை வழங்க வேண்டிய நெருக்கடியும், பொறுப்பும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உள்ளது.
ஒரு நாளைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் உள் நோயாளிகளாக சிகிச்சைப்பெறுகின்றனர். ஆனால், அரசு மருத்துவமனையில் 3,000 ‘பெட்’டுகள் மட்டுமே உள்ளன. அந்த ‘பெட்’டுகளும் போதிய பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ளன.
மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சைபெறும் பிரிவுகளுக்குத் தகுந்தாற்போல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டில்கள் வந்துள்ளன. ஆனால், மதுரை அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சில வார்டுகளில் தவிர மற்ற அனைத்து வார்டுகளிலும் சாதாரண கட்டில்களே உள்ளன. இந்த கட்டில்களும் உருப்படியாக இல்லாமல் கால் உடைந்தும், சரியான சமநிலையில் இல்லாமலும் பழுதடைந்துள்ளன.
ஏற்றம் இறக்கமாக சமநிலையில் இல்லாத கட்டில்களுக்கு செங்கல் கொடுத்து முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அண்ணா பஸ்நிலையம் அருகே உள்ள விபத்து காயம் அறுவை சிகிச்சைப்பிரிவில் உள்ள வார்டுகளில் சிகிச்சைப்பெறும் கை, கால் மற்றும் முதுகு உள்ளிட்ட பல்வேறு எலும்பு நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக ‘பெட்’டுகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், இவர்களும் மற்ற நோயாளிகளைப்போல் சாதாரண ‘பெட்’டுகளிலே சிகிச்சை பெறுகின்றனர்.
இங்குள்ள கட்டில்களுக்கும் செங்கல் கொடுத்து முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ‘ஸ்கேன்’, ‘எக்ஸ்ரே’ எடுக்க நோயாளிகளை சர்க்கர நாற்காலியில் அழைத்து செல்ல பணியாளர்கள் இல்லாமல் உறவினர்களை அழைத்து செல்லும் அவலமும் தொடர்கிறது.
இதுகுறித்து மருத்துவப்பணியாளர்கள் கூறுகையில், ‘‘பொதுவாக எலும்பு அறுவை சிகிச்சை வார்டுகளில் சிகிச்சைப்பெறும் நோயாளிகள் இயல்பாக நடமாட முடியாது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர்களை படுக்கையில் இருந்து எழுப்பது, உட்கார வைப்பது, நிற்க வைப்பது முக்கியம். அதற்கு பல்வேறு வகை பயன்பாட்டிற்கு தகுந்தாற்போன்ற ‘பெட்’ (Multipurpose bed) தேவைப்படும்.
நீண்ட நேரம் ஒரே நிலையில் படுக்கையில் இருந்தால் நோயாளிகளுக்கு படுக்கை புண்கள் வந்துள்ளன. அதனால், நோயாளிகளை எல்லா நிலைகளிலும் மாற்றவதற்கு ஆர்த்தோ வார்டுகளுக்கு பல்வகை பயன்பாட்டு ‘பெட்’கள் மிக அவசியமானது.
அரசு மருத்துவமனைகளில் எலும்பு சேருவதற்கும், கால்களில் நீர் கோராமல் இருப்பதற்கும் ‘பெட்’களை உயரப்படுத்துவதற்காக செங்கல் கொடுத்து முட்டுக்கொடுப்பட்டுள்ளன.
ஆனால், ஹைட்ராலிக் கட்டில்கள், எலக்டரானிக் கட்டில்கள் வந்துள்ள நவீன மருத்துவ காலத்தில் தற்போதும் ஆதிகாலத்து முறைப்படி ‘பெட்’களுக்கு செங்கல் கொடுத்து முட்டுக்கொடுப்பது அவலமானது. அந்த செங்கல் விலகி ‘பெட்’ ஆட்டம் கண்டால் நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எலும்பு முறிவு மற்றும் அறுவை சிகிச்சைப்பிரிவுகளில் உள்ள ‘பெட்’டுகள்தான் முக்கியமானது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இந்த விஷயத்தில் அலட்சியமாக உள்ளனர்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT