Published : 13 Nov 2019 08:18 AM
Last Updated : 13 Nov 2019 08:18 AM

தமிழக கடல் பகுதிகளில் மீன்வளத்தை அதிகரிக்க நடவடிக்கை: 1 லட்சம் மீன்குஞ்சுகளை விட மீன்வளத் துறை முடிவு

கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தின் மீன்வளத்தை அதிகரிக்க கடல் பகுதிகளில் 1 லட்சம் மீன்குஞ்சுகளை விடுவதற்கு மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது.

நாட்டின் மொத்த கடல் மீன் உற்பத்தியில் தமிழகம், நான்காவது இடத்தை வகிக்கிறது. 2018-19 ஆண்டில் தமிழகத்தின் மொத்த மீன் உற்பத்தி 6.75 லட்சம் டன்னாக உள்ளது. இவ்வாறு, உற்பத்தியாகும் மீன்களில் ஆண்டுதோறும் 1 லட்சம் டன்னுக்கு மேல் மீன் உணவுகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம், 5 ஆயிரம் கோடிக்கு மேல் அந்நிய செலாவணி கிடைக்கிறது.

இதுமட்டுமின்றி, உள்நாட்டிலும் மீன் உணவுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இவற்றை கருத்தில் கொண்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க செயற்கை பவளப் பாறைகள் அமைப்பது, அண்மை கடல் பகுதிகளில் அதிநவீன திறன் கொண்ட படகுகளில் மீன் பிடிக்க தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மீன்வளத்தை அதிகரிக்க தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீன்குஞ்சுகளை கடல்பகுதிகளில் விடுவதற்கு மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் மீன்வளத்தை அதிகரிக்க சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் பகுதிகளில் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. அவை நல்ல பலனைத் தந்தன. எனவே, மீண்டும் தமிழகத்தின் கடல் பகுதிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மீன் குஞ்சுகளை விடுவதற்கு முடிவு செய்துள்ளோம்.

ஒவ்வொரு வகையான மீன்களும் அவற்றுக்கு ஏற்ற இடத்தில் விடப்பட்டால்தான் எந்தவித பிரச்சினையும் இன்றி வளரும். இத்திட்டத்தை செயல்படுத்த விரைவில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். தமிழக அரசிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் இடத்தைக் கண்டறிந்து மீன் குஞ்சுகள் விடப்படும். இதன் மூலம், மீன்வளம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x