Published : 12 Nov 2019 02:03 PM
Last Updated : 12 Nov 2019 02:03 PM
கமல், ரஜினிக்குப் பதில் சொல்கிறேன் என்கிற போர்வையில் சிவாஜியைக் கிண்டலடிப்பதா? தமிழ் உள்ளவரை சிவாஜி இருப்பார் என சிவாஜி சமூக நலப் பேரவை முதல்வர் பழனிசாமிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''சொன்னது யார்? அவர் அரசியலில் இருக்கிறாரா? அவர் ஒரு நடிகர். அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. கமல் போன்ற ஆட்கள் வயது உள்ளவரை நடித்து சம்பாதித்துவிட்டு வயதான பின் கட்சி ஆரம்பிக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் அரசியலில் சிவாஜிக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்'' என்கிற தொனியில் பதில் அளித்திருந்தார்.
இது சிவாஜி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவாஜி கணேசன் அரசியலில் எந்த அளவுக்கு உச்சத்தில் இருந்தார், பவுன் ரூ.100 விற்ற காலத்திலேயே யுத்த நிதிக்காக ஒன்றரை லட்ச ரூபாயை சொந்தப் பணத்திலிருந்து அளித்தவர். பெரியார், அண்ணா, காமராஜர், நேரு, இந்திரா என பல மூத்த அரசியல் தலைவர்களின் அன்பைப் பெற்றவர். அவரை முதல்வர் கேவலமாக விமர்சிப்பதா? என சிவாஜியின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
இது குறித்து சிவாஜி சமூக நலப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:
“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (12-11-2019) செய்தியாளர்களிடம் பேசும்போது, புதிதாகக் கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களுக்கு சிவாஜி கணேசன் நிலைதான் ஏற்படும் என்று கூறி கிண்டலடித்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வயதான பிறகு நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்று இவருடைய கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரையும் சேர்த்துதான் தமிழக முதல்வர் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன். காங்கிரஸ் - அதிமுக கூட்டணி இருந்தபோது, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வெற்றிபெற வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி என்பதை தமிழக முதல்வருக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது.
நடிகர் திலகம் சிவாஜி நினைத்திருந்தால், அவருக்குப் பதவிகள் தேடி வந்திருக்கும். ஆனால், அவருடைய சுயமரியாதையினாலேயே அவர் எந்தப் பதவியையும் தேடிப் போகவில்லை.
நடிகர் திலகம் சிவாஜி கட்சி ஆரம்பித்தது மற்றும் தோல்வி அடைந்ததற்குக் காரணமே, தன்னுடைய உடன்பிறவா சகோதரராகப் பழகிய எம்.ஜி.ஆரின் ஆட்சி, அவருடைய துணைவியார் ஜானகி தலைமையில் தொடரவேண்டும் என்பதற்காகத்தான் என்ற வரலாற்றை, தமிழக முதல்வர் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.
நடிகர் திலகத்தால் அரசியலில் பதவிகளைப் பெற்றவர்கள் ஏராளம். யாருக்கும் துரோகம் செய்து பதவிகளை அடையவேண்டும் என்று நினைக்காத நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி குறைகூறலாமா? பதவியிலிருக்கும் வரைதான் யாருக்கும் மரியாதை. ஆனால், தமிழ் வாழும்வரை நடிகர் திலகம் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதுதான் உண்மை.
வெறும் நடிகராக மட்டும் இல்லாமல், நாட்டுப்பற்றுடன், நாட்டுக்காக, விளம்பரமில்லாமல் சேவையாற்றி, காமராஜரின் சீடராக தன் இறுதிக்காலம் வரை வாழ்ந்து மறைந்த. நடிகர் திலகம் சிவாஜியைப் பற்றி, வரலாறு தெரியாமல், தேவையில்லாமல் இழுப்பதை இனியாவது தமிழக முதல்வர் தவிர்க்கவேண்டும்”.
இவ்வாறு சிவாஜி சமூக நலப் பேரவை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT