Published : 14 May 2014 04:55 PM
Last Updated : 14 May 2014 04:55 PM
கூடங்குளம் அணு உலையில் ஏற்பட்ட விபத்துக்கு மத்திய அரசின் மெத்தனப்போக்கே காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கூடங்குளம் அணு உலையில் இன்று திடீர் விபத்து ஏற்பட்டு மூன்று பொறியாளர்கள் உட்பட மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
அணு உலையிலிருந்து செல்லும் அதிஉயர் வெப்பநிலையிலுள்ள சுடுநீர்க் குழாய் வெடித்ததனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தரமற்ற பொருள்களால் பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் கட்டமைப்புகளால் அணு உலை இயங்கி வருகின்றது என்கிற புகார் பொதுமக்களிடையே எழுந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த விபத்து அமைந்துள்ளது.
அயல்நாடுகளில் பயன்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட தரமற்ற பொருட்களைக் கொண்டு இந்த அணுஉலை கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற புகாரை இந்திய அரசு ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
மேலும் அப்பகுதிவாழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி இந்திய அரசு வழங்கவில்லை என்பதையும் இந்த விபத்திலிருந்து அறிய முடிகிறது. இந்திய அரசின் இந்த அக்கறையற்ற போக்கை, அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் மெத்தனப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
கடுமையாகக் காயமுற்றுள்ள பொறியாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு உரிய சிகிச்சை அளித்திட தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டையும் உடனடியாக வழங்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்படி உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு இந்திய அரசு உடனடியாக பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் குழுவை நியமிக்க வேண்டும். பொதுமக்களிடயே எழுந்துள்ள அச்சத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சுடுநீர்க் குழாய் வெடிப்பு மூலம் கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டிருக்குமோ என்கிற அச்சம் மக்களிடையே எழலாம். கதிர்வீச்சு நிகழவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும், இத்தகைய விபத்துகள் எதிர்காலத்தில் நிகழாத வண்ணம் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது" என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT