Published : 11 Nov 2019 05:29 PM
Last Updated : 11 Nov 2019 05:29 PM
தேனி
சபரிமலையில் மண்டல பூஜைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வர உள்ளதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி பம்பை முதல் சன்னிதானம் வரை கூடுதல் ஆக்சிஜன் பார்லர்கள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மூன்று மொழிகளில் வழிகாட்டி பலகை, சிறப்பு பேருந்து உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட உள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத இறுதி நாளன்று நடை திறக்கப்பட்டு தொடர்ந்து 5நாட்கள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதுதவிர மகரவிளக்கு, பங்குனி உத்திரம், சித்திரை விஜூ, பிரதிஷ்டை தினம், ஓணம், சித்திரை ஆட்டம் உள்ளிட்ட தினங்களில் வழிபாடுகள் நடைபெறும்.
கோயிலின் உச்சநிகழ்ச்சியாக மண்டலகால பூஜை விருச்சிக மாதம்(கார்த்திகை) முதல் தேதியில் இருந்து துவங்கும்.
இதன்படி இந்த ஆண்டு மண்டலகால பூஜைக்கான நடை திறப்பு வரும் 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு துவங்க உள்ளது. அன்று மாலை தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு தலைமையில் மேல்சாந்தி வாசுதேவன்நம்பூதிரி நடைதிறந்து தீபாராதனை வழிபாடுகளை மேற்கொள்ள உள்ளார்.
ஐயப்பன் மேல் சாத்தப்பட்ட விபூதி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மேல்சாந்தியின் பதவிகாலம் அன்றுடன் முடிவடைவதால் புதியதாக தேர்வு செய்யப்பட்ட மேல்சாந்தி சுதிர்நம்பூதிரியிடம் கோயில் சாவி ஒப்படைக்கப்படும்.
பொறுப்பு முடிந்த மேல்சாந்தி வாசுதேவன்நம்பூ அன்று இரவு கோயிலில் இருந்து ஊர் திரும்பிவிடுவார்.
மறுநாள் காலை கார்த்திகை முதல் தேதியில் இருந்து 41நாட்களுக்கும் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும். அதிகாலையில் நிர்மால்யபூஜை, சந்தன, நெய்அபிஷேகம் லட்சார்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும்.
மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி நடைபெறும். இதற்காக ஆரான்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்கஅங்கி கொண்டு வரப்படும். இந்த அங்கி 18படி வழியாக கொண்டு செல்லப்பட்டு அன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
மண்டல கால பூஜைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குமுளி அருகே ஆனவச்சால் எனும் இடத்தில் வாகனங்களை நிறுத்த வனத்துறைக்கு குமுளி பஞ்சாயத்து நிர்வாகம் அனுமதி கோரி உள்ளது.
பம்பை முதல் சன்னிதானம் வரை கூடுதல் ஆக்சிஜன் பார்லர்கள் நிறுவுதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து இடங்களிலும் சுத்தமான குடிநீர், பம்பை மற்றும் சன்னிதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை செயல்படும். இதில் இருதய சிகிச்சை நிபுணர்கள் இருப்பர்.
பம்பை நதியில் ஆடைகளை, மாலைகளை போட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் பம்பையில் இருந்து 20கிமீ.முன்பே நிலக்கல் எனும் இடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து கேரள அரசு பேருந்துகள் மூலம் பம்பை வரை செல்லலாம்.
பக்தர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பல இடங்களில் வழிகாட்டிப் பலகைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
தமிழக எல்லையில் தகவல் மையங்கள்:
தமிழக ஐயப்ப பக்தர்கள் தகவல் மையம் சார்பில் களியக்காவிளை, புளியரை, குமுளி உள்ளிட்ட தமிழக-கேரள எல்லையில் கூடுதல் தகவல் மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT