Last Updated : 11 Nov, 2019 05:02 PM

 

Published : 11 Nov 2019 05:02 PM
Last Updated : 11 Nov 2019 05:02 PM

வைகை அணை தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கு: சுற்றுலா பயணிகள் செல்ல தடை

ஆண்டிபட்டி

வைகை அணையில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பாலத்தை சீரமைத்து உயர்த்தி அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக வைகைஅணை உள்ளது. வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை தேனி, மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

சபரிமலை சீசன், கோடை விடுமுறை மற்றும் இதர விடுமுறை நாட்களிலும் வைகை அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இவர்களுக்காக இங்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அணையில் திறக்கப்படும் நீர் பூங்காவின் நடுப்பகுதி வழியே கடந்து செல்வதால் வடகரை, தென்கரை என்று இருபிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வடதுகரையில் சிறுவர் பூங்கா, மேல்தளத்தில் இருந்து படிப்படியாக இறங்கி வரும் நீர், பல்வேறு வடிவங்களில் வெட்டப்பட்ட புதர்ச்செடிகள்,, குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுக் கருவிகள், அணை ஏரியல் வியூ, பவர்ஹவுஸ், கசிவுநீர் சுரங்கப்பாதை உள்ளிட்டவை உள்ளன.

இடதுகரைக்கு இங்குள்ள தரைப்பாலம் வழியே செல்ல வேண்டும். அங்கு சிறுவர்களுக்கான ரயில், படகு இயக்கம், பிரமாண்டமாய் அமைக்கப்பட்ட 5 மாவட்ட வரைபடங்கள், ஓய்வு இருக்கைகள், வண்ணமீன் காட்சியகம் உள்ளிட்வை உள்ளன.

காலை 9 முதல் மாலை 5 மணி வரையும், அரசு விடுமுறை போன்ற நாட்களில் இரவு 8 மணி வரை யும் அனுமதி உண்டு. கட்டணம் ரூ.5.

குறைந்த கட்டணத்தில் பொழுதுபோக்கிற்கான இடம் என்பதால் உள் மற்றும் வெளிமாவட்ட பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் அணைநீர் திறக்கும் போதெல்லாம் வடகரையையும், தென்கரையையும் பிரிக்கக்கூடிய தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. எனவே பாதுகாப்பு கருதி இதில் சுற்றுலாப்பயணிகளை அனுமதிப்பதில்லை.

இதனால் அணையின் ஒருபகுதியை மட்டுமே பார்க்கக்கூடிய நிலை இவர்களுக்கு ஏற்படுகிறது. வடகரைக்கு பகுதி வழியே நுழைபவர்களால் தென்கரைக்குச் செல்ல முடியவில்லை. அதே போல் தென்கரைப்பகுதியில் நுழைவுக்கட்டணம் பெற்றவர்கள் எதிர்புறம் செல்ல முடியாது.

இதனால் சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

அணைகட்டப்பட்ட 1959-ல் இந்த தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அப்போது உயரமாக இருந்ததுடன் இதனடியில் நீர் எளிதாகச் சென்றது. தற்போது மண் மேவியதால் தரைப்பாலத்திற்கு மேல் நீர் செல்லும் நிலை உள்ளது.

எனவே இவற்றை உயர்த்தி அமைத்தால் ஆண்டு முழுவதும் வைகை அணை பூங்காவை முழுமையாக சுற்றிப்பார்க்கலாம். இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், இது மட்டுமல்ல வைகை அணையில் பல்வேறு வசதிகளை மேம்படுத்துவதற்காக திட்ட வரைவுகள் அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் சீரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x