Published : 18 Mar 2014 12:00 AM
Last Updated : 18 Mar 2014 12:00 AM

ஜெயலலிதாவின் பிரதமர் சுருதி குறைந்துவிட்டது: பிரச்சாரக் கூட்டத்தில் திமுக, அதிமுக மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு

ஜெயலலிதாவின் பிரதமர் சுருதி தற்போது குறைந்துவிட்டது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

சிவகங்கையில் தொகுதி மக்களவை வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கும் முன்னரே, பிள்ளையார்பட்டியில் ப.சிதம்பரம் தனது தேர்தல் பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கினார்.

பிள்ளையார்பட்டியில் தொடங்கி 21 இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது: காங்கிரஸ் கடந்த 130 ஆண்டுகளாக எட்டு தலை முறையாக நாட்டு மக்க ளுக்கு உழைத்த கட்சி. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை, எந்த கொம் பனாலும் உருவாக்க முடியாது. அடித்தாலும், அணைத்தாலும் நாங்கள் உங்கள் பிள்ளைகள்.

திமுக-அதிமுக சண்டைக் கோழிகள்

தமிழகத்தை பொறுத்த வரையில் அதிமுகவும், திமுகவும் சண்டைக் கோழிகள். அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்று டெல்லியில் போய் என்ன செய்ய போகிறார்கள்?

காங்கிரஸ் கட்சி வேண்டாமென்று திமுகவினர் ஒதுக்கி விட்டனர். பாஜகவோடு எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என கருணாநிதி அறிவித்திருக்கிறார். மூன்றாவது அணியிலும் திமுக கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சி களின் துணையும் கிடையாது. இதுபோன்ற சூழ்நிலையில் திமுக வினர் வெற்றிபெற்று என்ன செய்யப் போகிறார்கள்?

அதேபோல, அதிமுகவுக்கு பாஜகவோடு கூட்டணி கிடையாது. காங்கிரஸ் அவர்களுக்கு பரம விரோதி. கூட இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஜெயலலிதா கழற்றி விட்டுவிட்டார். ஆக, தனியாக வெற்றிபெற்று டெல்லியில் போய் அதிமுகவினர் என்ன செய்ய போகிறார்கள்? இரண்டு சண்டைக் கோழிகளும் தமிழ் நாட்டுக்குள் சண்டை போட்டுக் கொள்ளட்டும்.

மத்திய அரசை நடத்தக்கூடிய அதிகாரமோ, செல்வாக்கோ, வாய்ப்போ, வசதியோ அதிமுக, திமுகவுக்கு கிடையாது.

பத்து நாள்களுக்கு முன்புவரை ஜெயலலிதா நான்தான் அடுத்த பிரதமர் எனச் சொல்லிக்கொண் டிருந்தார். அவர்களது கட்சிக்காரர் களும், அம்மாதான் அடுத்த பிரதமர் என்றனர். அம்மா தலைமையில் ஆட்சி எனச் சொன்னவர்களின் சுருதி, தற்போது குறைந்துவிட்டது. தற்போது அதிமுக அங்கம் பெறும் ஆட்சி என மாற்றிப் பேசுகிறார்கள்.

காங். அரசு தொடர வேண்டும்

டெல்லியிலே ஆட்சி அமைக்க கூடிய கட்சி காங்கிரஸ்தான். ஆனால் பாஜகவினர் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக வில் முதல் வரிசைத் தலைவர்க ளில் தமிழர், மலையாளி, கன்னடத்துக் காரர், மேற்கு வங்கத்துக்காரர் யாராவது இருக்கிறார்களா?

பாஜக இந்தி மொழி பேசக்கூடிய மக்கள் மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய கட்சி. அங்கு முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்களுக்கு இடம் கிடையாது. மதவெறியர்களை பிரதிபலிக்கக் கூடிய கட்சி பாஜக.

தமிழகத்தில் ஒரு ஆட்சி வரலாம். போகலாம். ஆனால், டெல்லியில் காங்கிரஸ் அரசு தொடரவேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x