Published : 07 Nov 2019 02:00 PM
Last Updated : 07 Nov 2019 02:00 PM

தேமுதிக ஆட்சி அமைப்பதற்கான சூழலும் நேரமும் நிச்சயம் வரும்: பிரேமலதா நம்பிக்கை

பிரேமலதா: கோப்புப்படம்

சென்னை

தேமுதிக ஆட்சி அமைப்பதற்கான சூழலும் நேரமும் நிச்சயம் வரும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ.7) சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர், பிரேமலதா செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

கூட்டத்தில் என்னவெல்லாம் ஆலோசிக்கப்பட்டன?

உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பது குறித்து ஆலோசித்தோம். இந்தத் தேர்தலில், கட்சிக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு வேண்டிய வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் என்றாலே செலவு செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. வேட்பாளர்கள் விஸ்வாசமாக இருக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிடம் எத்தனை இடங்கள் கேட்பீர்கள்?

50% இடங்கள் கூட கேட்போம். அதுபற்றி இப்போது தெரியாது.

மக்களவைத் தேர்தலில் 7 இடங்கள் கேட்டும் உங்களுக்குத் தரப்படவில்லையே?

பாமக முதலிலேயே 7 இடங்களை வாங்கிவிட்டனர். கடைசியாக தேமுதிகவிடம் வந்ததால் 4 இடங்களே கிடைத்தன. உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் எதிர்பார்க்கும் இடங்களைக் கேட்டுப் பெறுவோம். முதல்வர் உறுதியளித்திருக்கிறார். நாங்கள் எந்தக் கட்சியுடனும் எங்களை ஒப்பிடவில்லை. எங்கள் பலம் எங்களுக்குத் தெரியும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜயகாந்த் ஒரு பிரச்சாரத்திற்குத்தான் வந்தார். என்ன பலம் என்பது அதிலேயே தெரிந்துவிட்டது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக - பாமகவினருக்கிடையே மோதல் ஏற்பட்டதே?

ஒரு சண்டையும் இல்லை. அது இரு நபர்களுக்கிடையேயான வாக்குவாதம். எதிர்க்கட்சிகளில் எத்தனையோ குளறுபடிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறுவோம்.

தேமுதிகவின் முதல்வர் கனவு கூட்டணிக் கட்சிகளுக்காக சமரசம் செய்யப்பட்டுவிட்டதா?

தேமுதிக ஆரம்பிக்கப்பட்டதே ஆட்சி அமைப்பதற்காகத்தான். முப்பெரும் விழாவில் விஜயகாந்த் அதைத்தான் பேசினார். அதற்கான சூழலும், நேரமும் நிச்சயம் வரும்.

இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x