Published : 07 Nov 2019 01:56 PM
Last Updated : 07 Nov 2019 01:56 PM
கடலூர்
கடலூரில், சென்னை மெட்ரோ குடிநீர் திட்டத்துக்காகத் தோண்டி, கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மழைநீர் செறிவூட்டும் கட்டமைப்பாக மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோடைகாலத்தில் சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து ராட்சதக் குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இது தவிர விக்கிரவாரண்டி -கும்பகோணம் சாலையோரத்தில் சேத்தியாத்தோப்பு முதல் பண்ருட்டி வரை 46 ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தண்ணீரும் குழாய்கள் மூலம் சென்னை கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பணிகளை சென்னை மெட்ரோ குடிநீர் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் 46 ஆழ்குழாய் கிணறுகளில் 6 கிணறுகள் பழுதான நிலையில், அவற்றுக்கு மாற்றாக அதன் அருகாமையில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இருப்பினும் பழைய ஆழ்குழாய் கிணறுகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாமல், தகரம் மற்றும் கற்களைக் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை மூடவேண்டும் என கடலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் சென்னை மெட்ரோ குடிநீர் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகள் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இதனிடையே திருச்சி மணப்பாறையில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தனது கட்டுப்பாட்டில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பாக மாற்றவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே சென்னை மெட்ரோ குடிநீர் நிறுவனமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தைப் போன்று, பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை மழைநீர் செறிவூட்டும் கட்டமைப்பமாக மாற்றவேண்டும் என கடலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக வடக்குத்து கிராமத்தில் இயங்கிவரும் சென்னை மெட்ரோ குடிநீர் நிறுவன உதவி செயற்பொறியாளர்களை சந்தித்துக் கேட்டபோது, ''46 ஆழ்குழாய் கிணறுகளில் 6 கிணறுகள் பயன்பாட்டில் இல்லை. அவை அனைத்தும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட பகுதியில்தான் உள்ளன. அவற்றை ஓரிரு தினங்களில் மூடிவிடுவோம். மழைநீர் செறிவூட்டும் கட்டமைப்பாக மாற்றும் திட்டம் எதுவுமில்லை'' என்றனர்.
அதேநேரத்தில் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த ராதாவாய்க்கால் பாசனப் பகுதி விவசாய சங்கத் தலைவர் ரங்கநாயகி கூறுகையில், ''சென்னையின் குடிநீர் தேவைக்காக, கடலூர் மாவட்டத்திலிருந்து தண்ணீர் உறிஞ்சுகின்றனர். நிலத்தடி நீரை உறிஞ்சும் தண்ணீர் அளவுக்கு, நிலத்தடி நீர் மட்டத்தை சமன்படுத்தும் பொறுப்பும் சென்னை மெட்ரோ குடிநீர் நிறுவனத்துக்கு உள்ளது. எனவே அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ளதால், சாலையோர வடிகால் மூலம் மழை நீரை எளிதாகச் சேமிக்கலாம்.
எனவே அவர்களது பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல், பயன்பாட்டில் இல்லாத 6 ஆழ்குழாய் கிணறுகளை மூடும் திட்டத்தை கைவிட்டு, மழைநீர் செறிவூட்டும் கட்டமைப்பாக மாற்ற வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT