Published : 06 Nov 2019 03:50 PM
Last Updated : 06 Nov 2019 03:50 PM

‘விளையாட்டாகச் சுட்டேன்; வினையானது’: துப்பாக்கியை குப்பைத்தொட்டியில் கண்டெடுத்தேன் - சரணடைந்த விஜய் வாக்குமூலம் 

விஜய்.

சென்னை

பால்ய நண்பனான கல்லூரி மாணவனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தலைமறைவான விஜய் நீதிமன்றத்தில் சரணடைந்தார். துப்பாக்கி குப்பைத்தொட்டியில் கிடைத்தது, விளையாட்டாகச் சுடும்போது நண்பன் தலையில் குண்டு பாய்ந்தது என வாக்குமூலத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரை அடுத்த வேங்கடமங்களம் பஜனைக்கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஷோபனா (42) என்பவரின் மூத்த மகன் முகேஷ் (19) தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் EEE 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

முகேஷின் நெருங்கிய நண்பர் விஜய் (19). இவரது சகோதரர்கள் உதயா மற்றும் அஜித். சிறுவயது முதல் ஒன்றாகப் பழகிவந்த விஜய்யும் முகேஷும் பால்ய நண்பர்கள். முகேஷ், விஜய், உதயா அனைவரும் நல்ல நண்பர்கள் என்பதால் முகேஷ் எப்போதும் விஜய்யின் வீட்டில்தான் இருப்பார்.

நேற்று முகேஷ், நண்பர் விஜய்யைப் பார்க்க அவரது வீட்டுக்கு வந்தார். இருவரும் தனியாக அறைக்குள் இருந்தனர். அப்போது விஜய்யின் அறையிலிருந்து திடீரென குண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டு அனைவரும் அங்கு ஓடிச் சென்று பார்த்தபோது முகேஷ் நெற்றியில் குண்டடி பட்ட காயத்துடன் கிடந்தார்.

விஜய் தப்பி ஓடிவிட்டார். தனியார் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாழாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விஜய்யைத் தேடி வந்தனர்.

இன்று காலை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்ற நடுவர் காயத்ரி தேவி முன் விஜய் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி குற்றவியல் நடுவர் உத்தரவிட்டார். குற்றவியல் நடுவர் முன் விஜய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில் துப்பாக்கி எப்படிக் கிடைத்தது என்கிற கேள்விக்கு, ''இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதை வண்டலூரில் ஒரு குப்பைத்தொட்டியில் கண்டெடுத்தேன். பின்னர் அதை எனது வீட்டில் மண்ணில் புதைத்து வைத்தேன்.

கடந்த தீபாவளி அன்று அதைத் தோண்டி எடுத்து என் அறைக்கு எடுத்து வந்தேன். நேற்று வீட்டுக்கு வந்த முகேஷ் அந்தத் துப்பாக்கியைப் பார்த்து என்னடா இது துப்பாக்கி என்று கேட்டு வாங்கிப் பார்த்தான். அதைக் கையில் வைத்து விளையாடும்போது தவறுதலாக வெடித்ததில் குண்டு பாய்ந்து முகேஷ் கீழே விழுந்தான்'' என்று விஜய் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னர் பயந்துபோய் தப்பி ஓடிய தான், போலீஸ் தேடுவதால் துப்பாக்கியைக் கையில் வைத்திருக்கப் பயந்து கேளம்பாக்கம் அருகே கடலில் வீசிவிட்டதாக விஜய் தெரிவித்துள்ளார். பொதுவாக இதுபோன்ற விவகாரங்களில் குற்றவாளிகள் சொல்லும் புனைவுக் கதைகள் பதிவு செய்யப்படும். பின்னர் போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவரும்.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் துப்பாக்கி கலாச்சாரமும், ரவுடியிஸமும் பெருகி வரும் நிலையில் விஜய் அளிக்கும் வாக்குமூலம் காரணமாக பலர் சிக்குவார்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். விரைவில் நீதிமன்றத்தில் மனு அளித்து போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது உண்மை தானாக வெளியே வரும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x