Published : 21 Aug 2015 02:59 PM
Last Updated : 21 Aug 2015 02:59 PM
காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில் விநோத வழிபாடு நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி மலைக் கோயில் உள்ளது. எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, இக்கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.
இது குறித்து முருக பத்கர்கள் சிலர் கூறும்போது, ‘இத்தகைய கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன வகை பொருளை வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் தான், இது ‘ஆண்டவன் உத்தரவு’ என்றும் அழைக்கப்படுகிறது’ என்றனர்.
சிவன்மலை முருகன் கோயில் அதிகாரிகள் கூறியதாவது: பக்தர்களின் கனவில் இறைவன் தோன்றி உத்தரவிடும் பொருளை பூஜையில் வைத்து வழிபாடு நடத்தி, பக்தர்களின் காட்சிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்படுகிறது. இது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுவரை பால், வெண்ணெய், தண்ணீர், துப்பாக்கி, வெடிபொருள், நாட்டு மருந்து, உட்பட பலவகை பொருட்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காட்சிக்கு வைக்கப்படும் பொருள் தொடர்பாக ஏதேனும் ஒரு சம்பவம் நிகழும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. உதாரணமாக, பேழைக்குள் வைக்கப்படும் பொருள் ‘தண்ணீர்’ எனில் மழையின்றி தட்டுப்பாடு ஏற்படக் கூடும், அல்லது சுனாமி போன்ற பேரழிவு ஏற்படலாம் என்பதாகும். அந்த வகையில் தற்போது, கொங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மூலம் ‘உப்பு’ பாக்கெட் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது, என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT