Published : 05 Nov 2019 05:22 PM
Last Updated : 05 Nov 2019 05:22 PM
மதுரை
முரசொலி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது பஞ்சமி நிலத்திலா? என்பது தொடர்பான விசாரணைக்காக வரும் 19-ம் தேதி ஆஜராகும்படி தமிழக தலைமைச் செயலருக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் (தலைவர் பொறுப்பு) எல்.முருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அசுரன் திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'அசுரன்- படம் மட்டுமல்ல.. பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து ஜாதிய சமூகத்தைச் சாடும், ஜாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்' என்று பாராட்டியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், 'அசுரன்' கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, 'முரசொலி' அலுவலகத்துக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் ஸ்டாலின் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என்றார்.
ராமதாஸின் விமர்சனத்துக்கு பதிலளித்த ஸ்டாலின், ‘முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலமே அல்ல. வழிவழியாக தனியாருக்குச் சொந்தமான பட்டா மனை. பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். நிரூபிக்கத் தவறினால் ராமதாஸும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?’ என்று சவால் விடுத்து, முரசொலி அலுவலக நிலத்தின் பட்டாவையும் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த ராமதாஸ், முரசொலி அலுவலகத்தின் மூல பட்டாவை வெளியிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த விசயத்தில் உண்மையை அறிந்துகொள்ள உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன், கடந்த அக்.21-ம் தேதி புதுடெல்லியிலுள்ள தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தின் துணைத்தலைவர் எல்.முருகனிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.சி. ஆணையம் கடந்த அக்.22-ல் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், ஸ்ரீனிவாசன் அளித்துள்ள முரசொலி அலுவலக நிலம் தொடர்பான புகார் குறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு பதில் அனுப்பியதா என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், கடந்த நவ.4-ம் தேதி எஸ்.சி.ஆணையம் தலைமைச் செயலருக்கு மீண்டும் ஒரு நோட்டீஸை அனுப்பியுள்ளது.
அதில், பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் அளித்துள்ள புகார் குறித்து வரும் நவ.19-ம் தேதி பகல் 12 மணிக்கு புதுடெல்லி, லோக்நாயக் பவனிலுள்ள எஸ்.சி.ஆணையத்தில் நடக்கும் விசாரணையில் ஆஜராக வேண்டும்.
தேசிய எஸ்.சி. ஆணைய துணை தலைவர் முருகன் தலைமையில் இந்த விசாரணை நடக்கும். அப்போது, இந்த புகார் குறித்து ஏற்கெனவே அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, இது சம்மந்தமான கோப்புகள், நாட்குறிப்புகள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். புகார்தாரரான ஸ்ரீனிவாசனும் இந்த விசாரணையில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரையில் இன்று (நவ.5) பாஜக செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தை திமுக.வே ஆக்கிரமித்துள்ளது என்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கக்கூடாது. முரசொலி அலுவலம் அமைந்துள்ளது பஞ்சமி நிலம் என்றால் மீட்கப்படும் என தமிழக முதல்வரும் தெரிவித்துள்ளார். பொது வாழ்க்கையில் உயரத்தில் இருக்கும் திமுக, இவ்விசயத்தில் தாங்கள் நேர்மையானவர்கள் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்க வேண்டும்.
இன்னும் ஒருபடி மேலே சென்று, எங்கள் மீது விசாரணை கமிஷன் அமைக்குமாறும், எங்கள் நேர்மையை கமிஷன் முன்பு நிரூபிக்கிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசிடம் கேட்டிருக்க வேண்டும். இதைவிடுத்து, சவால் விடும் அரசியலைத்தான் செய்கிறார்.
தலைமைச் செயலாளர் நடத்திய விசாரணையின் முடிவு என்னவென்று எனக்குத் தெரியவில்லை. புதுடெல்லியில் நவ.19-ம் தேதி நடக்கும் விசாரணையின்போது அனைத்து விபரங்களும் வெளிவந்துவிடும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT