Published : 05 Nov 2019 04:44 PM
Last Updated : 05 Nov 2019 04:44 PM

வேலூர் பெண்கள் சிறையில் இளநீர் பருகி 11 நாள் உண்ணாவிரதத்தை முடித்த நளினி 

நளினி: கோப்புப்படம்

வேலூர்

வேலூர் பெண்கள் சிறையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் நளினி, தனது 11 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று முடித்துக்கொண்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் விடுதலை கோரி கடந்த மாதம் 26-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரது உடல் நிலையை மருத்துவக் குழுவினர் தினமும் கண்காணித்து வந்தனர். அவருக்கு கடந்த நான்கு நாட்களாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி சிறைத்துறை அதிகாரிகள் நளினியிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

ஆனால், உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்த அவர் 11-வது நாளாக இன்று (நவ.5) காலை உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். பெண்கள் சிறை ஜெயிலர் அல்லிராணி, நளினியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் உண்ணாவிரதத்தைக் கைவிட்ட நளினி, சிறை அதிகாரிகள் கொடுத்த இளநீரைப் பருகினார்.

இது தொடர்பாக சிறைத்துறை தரப்பில் விசாரித்தபோது, "நளினியின் உடல் நிலை குறித்து சிறை அதிகாரிகள் அவரிடம் பேசினர். மேலும், அவரது விடுதலை தொடர்பான கோரிக்கை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்று இளநீரைப் பருகிய நளினி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் கடந்த 17 நாட்களாக முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் இன்று காலையில் பரிசோதித்தனர். பின்னர் அவருக்கு 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. நளினியின் உண்ணாவிரதம் முடிந்ததால் அதுகுறித்த தகவல் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், முருகனின் அதிகாரபூர்வமில்லாத உண்ணாவிரதத்தையும் முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x