Published : 05 Nov 2019 09:24 AM
Last Updated : 05 Nov 2019 09:24 AM
சென்னை
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்திருவள்ளுவர் படத்தை 40 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு கே.ஆர்.வேணுகோபால் சர்மா வரைந்ததாக அவரது மகன் விநாயக் வே.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் யார் என்பது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில் விநாயக் வே.ஸ்ரீராம் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:எனது தந்தை வேணுகோபால் சர்மா உலகப்புகழ் பெற்ற ஓவியர்மட்டுமல்ல. மிகச்சிறந்த தமிழறிஞர். கம்ப ராமாயணப் பாடல்களை மனப்பாடமாக சொல்லக் கூடியவர். திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் 40 ஆண்டுகள் ஆய்வு செய்து 1959-ல் திருவள்ளுவர் படத்தை வரைந்து முடித்தார்.
திருக்குறள் உலகப் பொதுமறை. உலகின் எந்த நாட்டவரும், எந்தமொழி பேசுபவரும், எந்த இனத்தைச் சேர்ந்தவரும் அப்பா வரைந்ததிருவள்ளுவரைப் பார்த்தால் இவர் நம்மவர் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் 40 ஆண்டுகால முயற்சியில் வரைந்த படம் அது.
அப்பா வரைந்த படத்தை முன்னாள் முதல்வர்கள் காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, தமிழறிஞர்கள் மு.வரதராசனார், கி.ஆ.பெ.விசுவநாதம், பாரதிதா சன், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, கவிஞர் கண்ணதாசன், கிருபானந்த வாரியார் உள்ளிட்டோர் ஏற்றுக் கொண்டு பாராட்டினர்.
1964-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியில், பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவையில் அப்பா வரைந்த திருவள்ளுவர் படத்தை அன்றைய குடியரசு துணைத் தலைவர் ஜாகீர் உசேன் திறந்து வைத்தார். தபால் தலையும் வெளியிடப்பட்டது.
1967-ல் அண்ணா முதல்வரான தும் இந்த திருவள்ளுவர் படத்தை அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அரசு தொடர்பான அனைத்து இடங்களிலும் வைக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. அப்பா கைப்பட வரைந்த திருவள்ளுவர் படம் என்னிடம் பாதுகாப்பாக உள்ளது.
திருவள்ளுவர் மட்டுமல்ல. சட்டப்பேரவையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் ஆகியோரின் படமும் அப்பா வேணுகோபால் சர்மா வரைந்தவைதான்.
மேலும், தமிழ்த்தாய், தியாகய்யர், புவனேஸ்வரி, காமாட்சி, மீனாட்சி, கிருஷ்ணர், நள தமயந்தி, தங்கமயில் முருகன் உள்ளிட்ட படங்களையும் அப்பா வரைந்துள்ளார். தற்போது திருவள்ளுவர் படம் பெரும்பாலானஇடங்களில் இல்லை. அவற்றைமீண்டும் அரசு அலுவலகங்கள்,கல்வி நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வைக்க வேண்டும்.
வேணுகோபால் சர்மாவின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விநாயக் வே.ஸ்ரீராம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...