Published : 04 Nov 2019 05:24 PM
Last Updated : 04 Nov 2019 05:24 PM
சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து குழந்தை உயிரிழந்தது அனைவரிடமும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுக்கு ஓரிருவர் மாஞ்சா நூலால் உயிரிழக்கின்றனர். உயர் நீதிமன்றம், பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவை பட்டம் (காத்தாடி) விடுவதைத் தடை செய்தும் போலீஸாரின் அலட்சியத்தால் மாஞ்சா நூல் உயிரிழப்புகள் இன்னும் தொடர்கதையாகி வருவது வேதனை அளிக்கிறது.
இதுகுறித்த ஒரு தொகுப்பு:
சென்னை ஏழுகிணறைச் சேர்ந்த கோபால், சுமித்ரா தம்பதிகள் தங்களது இரண்டரை வயது ஆசை மகனுடன் நேற்று வெளியே கிளம்பும்போது நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். தனது மகனை மீண்டும் பிணமாகத்தான் வீட்டுக்குத் தூக்கி வருவோம் என்று.
சிலருடைய பொழுதுபோக்குக்கும், சட்டமீறலுக்கும், போலீஸாரின் அலட்சியத்துக்கும் அநியாயமாக ஒரு பிஞ்சு உயிர் கருகிவிட்டது. சுஜித்தின் மரண சோகத்திலிருந்து மீள்வதற்குள் சென்னை மக்களின் மனதில் அபிநவ் மரணம் சோகத்தை எழுப்பியுள்ளது.
காற்றாடிக்குப் பயன்படுத்தப்படும் கண்ணாடித் துகள்கள் போட்டு காய்ச்சி எடுக்கப்படும் மாஞ்சா நூல், காற்றாடியுடன் அறுந்து சாலை வழியாகப் பறந்து வரும்போது இருசக்கர வாகன ஓட்டிகளின் கழுத்தில் சிக்குகிறது. வாகனத்தின் வேகம், கண்ணாடித் துகள்களால் ரம்பம் போல் மாறிவிட்ட நூல் காரணமாக வாகன ஓட்டி யோசிப்பதற்குள் அனைத்தும் முடிந்து விடுகிறது.
கழுத்தில் முக்கியமாகப்படும் நூல் கத்தி கொண்டு அறுப்பதுபோல் குரல்வளையை அறுக்க, அடுத்த நொடி ரத்தம் வீணாகி மரணம் நிகழ்கிறது. பிழைக்கும் சிலர் நீண்டகால மருத்துவ சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி என வாழ்க்கையைத் தொலைக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். மருத்துவச் செலவு, நீண்டநாட்கள் உயிர் போராட்டம் அந்தக் குடும்பத்தின் நிலையையே மாற்றிவிடுகிறது.
சாதாரண வாகன விபத்தை விட சிறிய அளவில் செக்ஷன்கள் போட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்கின்றனர். இதை விபத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. விபத்து என்பது தெரியாமல் நடப்பது. சில நேரம் கவனக்குறைவால் நடப்பது. ஆனால் மாஞ்சா நூல் மரணம் தெரிந்தே வேண்டுமென்றே நடப்பது. காற்றாடி விடும் பொழுதுபோக்கு ஆர்வத்தில் மற்றவர்கள் உயிரோடு விளையாடுவதால் நடப்பது.
காற்றாடி விடுவது உலகெங்கும் உள்ள ஒரு பொழுதுபோக்கு. இந்தியாவிலும் அதிக அளவில் காற்றாடி விடுகின்றனர். காற்றாடிகளில் வசதிக்கேற்ப பாணா காற்றாடி என்கிற பெரிய காற்றாடிகளை விடுகின்றனர். அப்படி விடும்போது மற்றவர்களுடன் டீல் போட்டு அவர்கள் காற்றாடிகளை அறுக்க வலுவான நூல் தேவை. இதற்காகத் தேர்வு செய்வதே மாஞ்சா.
தற்போது சென்னையில் காற்றாடி விடுவதில் பந்தயம் கட்டி போட்டிகள் நடத்தப்படுகின்றன. ரூ.1000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பந்தயம் கட்டுகின்றனர். இதற்காக 10-ம் நம்பர் நூலை வாங்கி மாஞ்சா போடுகின்றனர். டியூப் லைட்டை மையாக அரைத்து, வஜ்ரம், கலர் சாயம் உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டு தயாரித்து மாஞ்சா போடுகின்றனர்.
மாஞ்சா நூலைத் தயாரித்து விற்கும் நபர்கள் உள்ளனர். சிலர் சொந்தமாக மாஞ்சா போட்டுக்கொள்வார்கள். இவை போட்டிபோட்டு பட்டம் விடும்போது மிக உயரத்தில் அறுபடும் காற்றாடிகள் காற்றில் பறந்து வரும். அதன் நூல் கீழே இழுத்தபடி வரும். அப்போது சாலையில் அந்த நூல் இழுத்துச் செல்லும்போது அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளின் கழுத்தைப் பதம் பார்க்கின்றன.
இதில் அதிகமாக சிறுவயது குழந்தைகள் பெற்றோர் கண்முன்னே துடிதுடித்து இறப்பதுதான் வேதனை. காரணம் இருசக்கர வாகனத்தில் குதூகலத்துடன் வெளியில் செல்வோர் குழந்தைகளை முன்பக்கம் பெட்ரோல் டாங்க் மீது உட்கார வைத்து வாகனத்தை ஓட்டுவார்கள். இதனால் சாலையில் தொய்வாக வரும் மாஞ்சா நூலில் முதலில் சிக்குவது குழந்தைகளே.
வழக்கமாக இப்படி ஒரு சம்பவம் நடந்த பின்னர் போலீஸார் சிலரைப் பிடிப்பார்கள். விற்பவர்கள் யார் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களையும் அழைத்து வந்து வழக்குப் போடுவார்கள். அவை சாதாரண வழக்குகளாக இருக்கும். அபிநவ் விவகாரத்திலும் 304 (1) (கொலை அல்லாத உயிரிழப்புக்குக் காரணமாக இருத்தல்) பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில் எளிதில் ஜாமீனில் வந்துவிடலாம். 304 (2) பிரிவைக்கூடப் போடுவதில்லை.
இதுவரை மாஞ்சா நூல் கழுத்தறுத்து உயிரிழந்தவர்கள், விபத்தில் சிக்கியவர்கள்:
சென்னையில் இரு சக்கர வாகனங்கள் பயன்பாடு 1990களுக்குப் பிறகு அதிகரித்தது. மாஞ்சா நூல் அதிகம் பதம் பார்ப்பது இருசக்கர வாகன ஓட்டிகளையே.
* 2006-ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் கோதண்டராமன் என்பவர் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அநேகமாக சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து உயிர் பலி எனப் பதிவானது இதுதான் முதலாவதாக இருக்கும்.
* அடுத்த ஆண்டே 2007-ல் வடசென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து தந்தையுடன் சென்ற 2 வயது சிறுவன் உயிரிழந்தார்.
* அனைவரையும் உருக்கிய நிகழ்வாக பெற்றோருடன் சந்தோஷமாக கடற்கரைக்குச் சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமியின் கழுத்தை எழும்பூர் அருகே மாஞ்சா நூல் பதம் பார்க்க, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
சென்னை பெரம்பூர் குருசாமி தெருவைச் சேர்ந்தவர் செய்யது ஷேக் முகமத. இவரது 4 வயது மகள் ஷெரீன் பானு எல்.கே.ஜி. படித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி குடும்பத்தோடு அனைவரும் மெரினா கடற்கரைக்குப் புறப்பட்டனர். கடற்கரைக்குப் போகும் மகிழ்ச்சியில் தந்தையின் முன்னே பெட்ரோல் டாங்க் மீது அமர்ந்து கொண்டார் ஷெரீன் பானு. பின் சீட்டில் மனைவி அமர்ந்திருக்க, மோட்டார் சைக்கிளில் புரசைவாக்கம் தாண்டி எழும்பூரைத் தாண்டி ஆதித்தனார் சாலையில் நுழைந்த அவர்கள் மகிழ்ச்சியை ஒருகணத்தில் பறித்தது மாஞ்சா நூல்.
என்ன நடக்கிறது என்று தீர்மானிப்பதற்குள் ஷெரின் பானுவின் கழுத்தை நூல் அறுக்க, கீழே ரத்த வெள்ளத்தில் குழந்தை விழ, ரத்தம் வழிந்தோட எழும்பூர் மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடினர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சற்று நேரத்தில் குழந்தையின் உயிர் பறிபோனது.
* 2012- ம் ஆண்டில் மாஞ்சா நூல் காரணமாக 2 உயிரிழப்புகள் நிகழ்ந்தன. அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிளில் செல்லும்போது மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து உயிரிழந்தார்.
* அதே ஆண்டில் (2012) - தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கோபாலகிருஷ்ணன் என்பவர் கழுத்தை அறுத்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
* மந்தைவெளி ஜெயகாந்த் (34). சோழிங்கநல்லூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மாலா (29). இவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. 2013 ஆம் ஆண்டு ஜனவரி 1 புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடிய ஜெயகாந்த், மாலையில் புளியந்தோப்பில் உள்ள மாமியார் வீட்டுக்கு பிரியாணி, ஸ்வீட் பாக்கெட்டுடன் பைக்கில் சென்றார்.
பின் இருக்கையில் மனைவி, குழந்தையுடன் பல்லவன் சாலை பாடிகாட் முனீஸ்வரன் கோயில் அருகே சென்ட்ரல் பாலத்தில் செல்லும்போது மாஞ்சா நூல் ஜெயகாந்த் கழுத்தை அறுத்தது. மனைவி, குழந்தை கண்ணெதிரிலேயே அவர் உயிரிழந்தார்.
* ஜூலை 4-ம் தேதி 2010-ம் ஆண்டு டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மாஞ்சா நூல் கழுத்தறுத்ததில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் உயிரிழந்தார். வளசரவாக்கம் சுப்பிரமணியபுரத்தில் வசித்தவர், திருப்பதி (28). சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வாழ்க்கையின் முன்னேற்றப் படிகளில் இருந்தவர். மனைவி நித்யா(25). இரண்டு அழகான பெண் குழந்தைகள் என வாழ்க்கை அமைதியாகச் சென்ற நேரம்.
ஜூலை 4-ம் தேதி 2010-ம் ஆண்டு மாலை, வியாசர்பாடி பி.வி. காலனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னர் தனது சொந்த வேலை ஒன்றுக்காக மீண்டும் வளசரவாக்கம் செல்வதற்காக கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, வியாசர்பாடி பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது மாஞ்சா தடவிய காற்றாடி நூல், திருப்பதியின் கழுத்தை அறுத்தது. கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார்.
* அவரைப் பின் தொடர்ந்து வந்த சர்மாநகரைச் சேர்ந்த சரவணன் (26) என்பவரது கழுத்தையும் மாஞ்சா நூல் அறுத்தது. அவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி உயிரிழந்தார். சரவணன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.
* 2015-ம் ஆண்டு பெரம்பூர் மேம்பாலத்தில் பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் அஜய் மாஞ்சா நூல் அறுத்ததில் உயிரிழந்தார். பெரம்பூர், சேமாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், ராஜு (32) கார் பெயின்டர். இவரது மனைவி நிரோஷா (30). மகன் அஜய்( 5), 2 வயதில் ஒரு மகள் அளவான குடும்பம்.
செப்.27, 2015-ம் ஆண்டு அன்று பிற்பகல் 2.20 மணிக்கு, இருசக்கர வாகனத்தில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஓட்டலுக்கு உணவருந்தச் சென்றார். மனைவி பின்னால் அமர்ந்திருக்க, 2 வயது மகள் முன்னால் அமர்ந்திருந்தார். அஜய், ராஜுவின் தோளைப் பிடித்தபடி, நின்று கொண்டே பயணித்தான். இருசக்கர வாகனம், பெரம்பூர் மேம்பாலத்தில் சென்ற போது, மாஞ்சா நுால், ராஜுவின் கழுத்தை அறுக்க, அப்படியே சரிந்து விழுந்தான். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான் அஜய்.
இதன் பின்னர் உயர் நீதிமன்றம் தீவிரமாக இந்த விஷயத்தில் தலையிட்டு மாஞ்சா நூல் காற்றாடி விடுவதைத் தடை செய்தது. மாஞ்சா நூல் தயாரிப்பைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அப்போதைய காவல் ஆணையர் ஜார்ஜ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும், மீறி மாஞ்சா நூல் பயன்படுத்தினால் 4 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடருவோம் என எச்சரித்தார்.
ஆனாலும் பயனில்லை, காற்றாடி விடுபவர்களுக்கும் பயமில்லை
* 2015-ம் ஆண்டு தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் அறுத்ததில் 4 வயது சிறுவன் சாவின் விளிம்புக்குச் சென்று மீண்டு வந்தான். தேனாம்பேட்டை, ராமலிங்கேஸ்வரர் கோயில் தெருவில் வசிக்கும் பூபதி என்பவரின் ஒரே மகன் பவித்ரன் (4). பூபதி டெய்லர். சிறுவன் பவித்ரன், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.
சம்பவம் நடந்த அன்று உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வர, மோட்டார் சைக்கிளில் சுற்றிவர ஆசை கொண்ட பவித்ரன் அடம் பிடிக்க அந்த உறவினர் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்ட் சென்றுள்ளார்.
அப்போது எங்கிருந்தோ வந்த காற்றாடி மாஞ்சா நூல் சிறுவன் பவித்ரனின் முகத்தில் கிழித்தது. கழுத்தில் பட்டிருந்தால் உயிர் போயிருக்கும். நல்வாய்ப்பாக முகத்தில் பட்ட மாஞ்சா கயிறு பவித்ரனின் மூக்கில் அறுத்துக் கிழித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் பவித்ரனின் முகம் சரி செய்யப்பட்டது.
*கடந்த 2017 -ம் ஆண்டு கொளத்தூரைச் சேர்ந்த சிவபிரகாசம், தாம்பரம்-மதுரவாயல் பைபாஸில் மாஞ்சா நூல் கழுத்தறுத்ததால் உயிரிழந்தார்.
* சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் திருவொற்றியூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலையில் உள்ளார். 2017-ம் ஆண்டு, ஆகஸ்டு 16-ம் தேதி அதற்காக மோட்டார் சைக்கிளில் செல்லும்போது எர்ணாவூர் பகுதியில் எண்ணூர் விரைவு சாலையில் மாஞ்சா நூல் தினேஷின் கழுத்தை அறுத்தது. அந்த வழியில் சென்ற வாகன ஓட்டிகள் தினேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின் தினேஷ் பிழைத்தார்.
* கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் மேம்பாலத்தில் கல்லூரி மாணவர் கொருக்குப்பேட்டை அரிநாராயணபுரத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (22). மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் கழுத்தறுபட்டு சிகிச்சைக்குப் பின் பிழைத்தார்.
* பெரம்பூர் பாலத்தில் ஓராண்டு கழித்து மீண்டும் ஒரு விபத்து நடந்தது. கடந்த ஆண்டு டிச. 28-ம் தேதி பெரவள்ளூர் அன்னை தெரசா நகரில் வசிக்கும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் நரம்பியல் மருத்துவராகப் பணியாற்றியவர் டாக்டர் சரவணன் (38). அன்று மாலை 5 மணி அளவில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்தது.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் நல்வாய்ப்பாக பெரிய அளவில் கழுத்தறுபடாமல் தப்பித்தார். ஆனாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல நாள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.
* 19.08.2019 குன்றத்தூரைச் சேர்ந்த சரவணன்( 36) என்பவர் மனைவி சுபித்ரா(32). தனது 3½ வயது ஆண் குழந்தையுடன் மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்லும்போது தாம்பரம் ரங்கநாதபுரம் அருகே காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் குழந்தையின் கழுத்தை அறுத்தது. இதில் குழந்தை தீவிர சிகிச்சைக்குப் பின் பிழைத்தது.
* இந்த ஆண்டு தாம்பரத்தில் மாஞ்சா நூல் அறுத்ததில் இரண்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிர் பிழைத்தனர்.
* வடநாட்டிலும் டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் மாஞ்சா நூலால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு குஜராத்தில் மாஞ்சா தடவிய காற்றாடி நூல் அறுத்து 8 வயது சிறுவன் உள்பட 5 பேர் பலியாகினர்.
குஜராத் மாநிலத்தில் காற்றாடி திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி ஏராளமானோர் கட்டிடங்களின் மேலே நின்று காற்றாடிகளைப் பறக்க விட்டனர். மேசானா பகுதியில் சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவனின் கழுத்தை மாஞ்சா தடவிய காற்றாடி நூல் அறுத்ததில் அவன் உயிரிழந்தான். இதேபோல் மாஞ்சா நூல் அறுத்து மேலும் 4 பேர் பலியாகினர். அகமதாபாத், சூரத், ராஜ்கோட் உள்பட பல இடங்களில் 90 பேர் படுகாயம் அடைந்தனர்.
மாஞ்சா நூல் மனிதர்களை மட்டுமல்ல பறவைகளையும் கொல்கிறது. கடந்த ஆண்டு அண்ணா நகரில் காகம் ஒன்று மாஞ்சா நூலில் சிக்கி காயத்துடன் துடிதுடித்தபடி நூலுடன் தொங்கியதைப் பார்த்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர்கள் வந்து காகத்தை மீட்டு பறக்கவிட்டனர்.
பசுமை தீர்ப்பாயம் தடை
காற்றாடிகளைப் பறக்கவிட மாஞ்சா நூலைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனிநபர்கள் மற்றும் ‘பீட்டா’ உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அதில், ‘‘மாஞ்சா நூலைக் காற்றாடி விடுவதற்குப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. குறிப்பாக மனிதர்கள், பறவைகள், விலங்குகளின் உயிருக்கு மாஞ்சா நூலால் ஆபத்து உள்ளது.
மாஞ்சா நூலில் சிக்கி ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நூலில் கண்ணாடித் தூள், உலோகங்கள், கூர்மையான பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. எனவே இந்த நூலை முற்றிலுமாகத் தடை செய்யவேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.
நைலானில் தயாரிக்கப்படும் சீன மாஞ்சா நூல் மற்றும் இதர செயற்கை பொருட்களில் தயாரிக்கப்படும் மக்கும் தன்மையற்ற மாஞ்சா நூல், கண்ணாடித்தூள் சேர்த்து தயாரிக்கப்படும் பருத்தி நூல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இத்தகைய மாஞ்சா நூலைத் தயாரிப்பது, விற்பனை செய்வது, இருப்பில் வைப்பது, கொள்முதல் செய்வது மற்றும் காற்றாடிகளில் பயன்படுத்துவது ஆகியவை நாடு முழுவதும் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது.
இந்தத் தீர்ப்பை மீறுவோர் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் 2016-ம் ஆண்டில் தடை விதித்தது.
என்னதான் பிரச்சினை வந்தாலும் மாஞ்சா நூலுக்குத் தடை வந்தாலும் அமேசான் உள்ளிட்ட சில ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மாஞ்சா காற்றாடி விற்பனை பகிரங்கமாக நடக்கிறது. உள்ளூர்களிலும் மாஞ்சா நூல்கள், காற்றாடிகள் விற்கப்படுகின்றன. இவற்றைக் கண்டறித்து தடுக்கும் முயற்சியில் அரசு இறங்கவேண்டும் என்பதே பதைபதைப்புடன் மோட்டார் சைக்கிளில் குழந்தைகளை வைத்துப் பயணம் செய்யும் பெற்றோரின் எதிர்பார்ப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT