Published : 04 Nov 2019 03:46 PM
Last Updated : 04 Nov 2019 03:46 PM
மதுரை
மதுரையின் நீண்டகால சாலை போக்குவரத்து பிரச்சினையாக உருவெடுத்துள்ளது ஷேர் ஆட்டோக்கள். 3 பேருக்கு பதில் 10 பேரை ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் பறக்கும் ஷேர் ஆட்டோக்களால் அன்றாடம் விபத்துகள் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இவற்றையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்க்கிறது.
மதுரையில் ஷேர் ஆட்டோக்கள் ஏன் இப்படி புற்றீசல் போல் பெருக்கெடுத்தன. எப்படி எந்தவித கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமல் மக்களின் உயிருக்கு உலை வைக்கின்றன என்பது பற்றிய செய்தித் தொகுப்பு இது..
விரும்பிய இடத்தில் ஏற்றி இறக்கும் மினி பஸ்கள்..
போக்குவரத்து வசதிகள் அபூர்வமாக இருந்த காலகட்டத்தில் மக்களுக்குப் பேருதவியாக வந்தன மினி பேருந்துகள். தமிழகத்தில் முதன்முதலாக 25 ஆண்டுகளுக்கு முன்னதாக மினி பஸ் சேவை தொடங்கியது. அரசு பஸ்கள் பேருந்து நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். ஆனால், மினி பஸ்கள், பயணிகளை நினைத்த இடத்தில் ஏற்றி, இறக்கிவிட்டதால் இந்த பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
சந்துகளுக்குள் சென்று 'சேவை' செய்யும் ஷேர் ஆட்டோக்கள்..
அதன்பிறகு சிறியளவில் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. பஸ்கள் சென்றுவர இயலாத இடங்களில்கூட மக்கள் விரும்பிய இடங்களுக்கு நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் சென்று வர ஷேர் ஆட்டோக்கள் பெரும் உதவியாக இருந்தன.
எங்கோ ஒரு மூலையில் நின்று கை காட்டினால்கூட பயணிகளை ஏற்றிச் சென்றனர் ஷேர் ஆட்டோக்காரர்கள். அதனால், மாநகர், புறநகர் பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் எண்ணிக்கை புற்றீசல்போல் அதிகரித்தன. மக்கள் மினி பஸ்களை பயன்படுத்துவதை குறைத்தனர்.
அதனால், நஷ்டத்தில் இயங்கிய மினி பஸ்கள் பர்மிட்டுகளை அதன் உரிமையாளர்கள் திருப்பி ஒப்படைத்துள்ளனர். மதுரையில் மட்டும் இவ்வாறாக 50 சதவீத மினி பஸ் பர்மிட்டுகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஓடுபவை 12,000; பெர்மிட் உள்ளவை 50...
தற்போது மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதில், வெறும் 50 ஆட்டோக்களுக்கு மட்டுமே ‘ஷேர் ஆட்டோ’ பர்மிட் உள்ளன. இந்த ஆட்டோக்களில் 5 பேர் மட்டுமே ஏற்றலாம். ஆனால், கட்டணம் கட்டுப்படியாகாது என்தால் இவை தற்போது இயக்கப்படவில்லை.
தற்போது இயக்கப்படுவது அனைத்தும் சாதாரண ஆட்டோக்கள்தான். இந்த ஆட்டோக்களில் 3 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது. ஆனால், 10 பேர் முதல் 15 பேர் வரை புளி மூட்டைபோல் ஏற்றுகிறார்கள். அதற்காக இந்த சாதாரண ஆட்டோக்களில் டிரைவருக்கு பின் ஒரு இருக்கை, நடுவில் ஒரு இருக்கை, அவர்களுக்கு மேலே பின்புறம் ஒரு இருக்கை என்று டிரைவர்களே ஆட்டோக்களை மறுவடிவம் செய்துள்ளனர்.
அனைத்து ஆட்டோக்களும் விதிமுறைகளை மீறி ஷேர் ஆட்டோக்களாக மாற்றப்பட்டு, பயணிகளை அடைத்துச் செல்கின்றன. அந்த ஆட்டோக்களிலே மிகப்பெரிய எழுத்தில் 3 பேர் மட்டுமே அமர வேண்டும். மீறினால் ஆர்.டி.ஓ.,வுக்கு போன் செய்யலாம் என்று ஒரு குறிப்பிட்ட டோல் ப்ரீ தொலைபேசி எண் குறிப்பிட்டுள்ளனர். அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதுதான் வேதனை.
வேடிக்கை பார்க்கும் போலீஸ்..
சிக்கனல்கள், சாலைகளில் மூலைக்கு மூலை நின்று ‘ஹெல்மெட்’ போடாவிட்டால் துரத்திப்பிடித்து அபராதம் விதிக்கும் போலீஸார், தங்கள் கண் முன்பே பள்ளிக் குழந்தைகள், பெண்கள், பெரியவர்களை அடைத்துச் செல்லும் ஆட்டோக்களை கண்டும், காணாமல் கடந்து செல்கின்றனர்.
ஓட்டுநர் இருக்கையிலே 2 பேர் அமர்ந்து ஆட்டோக்கள் நகரச்சாலைகளில் பகிரங்மாகவே செல்கின்றன. அதையும் போக்குவரத்து போலீஸார் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். போலீஸாரின் இந்த அலட்சியத்தாலே சமீபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் ஓரிரு பேர் இறக்கின்றனர். பலர் படுகாயம் அடைந்து வருகின்றனர்.
ரூ.500 வாடகை.. அதற்கு மேல் வந்தால் ஓட்டுநருக்கு..
ஷேர் ஆட்டோக்கள் மூலம் நல்ல வருவாய் கிடைப்பதால் பெரும் முதலாளிகள், 10 முதல் 30 ஷேர் ஆட்டோக்கள் வரை வாங்கி அதை ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.500 வீதம் நாள் வாடகைக்கு விடுகின்றனர். அவர்கள், இந்த 500 ரூபாய் வாடகை, டீசல் பணம் போக அதிக ‘டிரிப்’களை ஓட்டி லாபம் சம்பாதிக்கும் நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு சாலைகளில் வேகமாக பறக்கின்றனர். அந்த பதட்டத்தில் வேகத்தில் ரோட்டில் செல்வதால் அவர்களுக்கு எதிரே வரும் வாகனங்கள், பள்ளங்கள், சிக்கனல்கள் எதுவும் தெரியாது. யாரையும் தட்டிவிட்டால்கூட நிற்க மாட்டார்கள். சாலையோரம் எந்த பயணியாவது கை காட்டுகிறமாதிரி தெரிந்தால் எந்த சைகையும், சிக்கனலும் போடாமல் உடனே திரும்பி விடுவார்கள்.
பின்னால் வருகிற இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவார்கள். ஆனால், அப்போதும் கூட இவர்கள் என்ன நடந்து என்று கூட திரும்பிப்பார்க்க மாட்டார்கள். நகர்ப் பகுதியில் பயணிகளை ஏற்றி, இறக்க பஸ்நிறுத்தங்கள் உள்ளன. ஆனால் ஆட்டோ டிரைவர்கள், ரோட்டின் நடுப்பகுதியில் நின்று கொண்டே எங்கு போகிறார்கள் என்று யூகிக்க முடியாதபடி திடீரென்று திரும்புவார்கள்.
சீருடை, பேட்ஜ் இல்லை..
அதிக பயணிகளை ஏற்றுவதால் மதுரை மாநகரப்பகுதியில் தினமும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கண்ட இடங்களில் நிறுத்துவதால் நெரிசல், விபத்து ஏற்படுகிறது. ஆட்டோக்களில் முகப்பு விளக்கு, இன்டிகேட்டர், ஹாரன்களை பராமரிப்பதில்லை. அதனால், கார் ஓட்டி வருகிறவர்கள், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கார்களை இடித்துவிட்டு ஆட்டோக்காரர்கள் தப்பி விடுகின்றனர். ஓட்டுநர்கள் சீருடை, பெயர் விவர 'பேட்ஜ்' அணிவதில்லை. இதனாலேயே ஏதாவது விபத்து சம்பவங்கள் நடந்தாலும்கூட ஆட்டோ டிரைவர்களை போலீஸாரால் பிடிக்க முடியவில்லை.
கட்டுபடியாகவில்லையே..
இவ்வாறாக மதுரை சாலைகளில் ஷேர் ஆட்டோக்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில் இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் அழகர் கூறுகையில், ‘‘வாகன உரிமையாளருக்கு கட்டணம், பெட்ரோல் விலை போக லாபம் சம்பாதிக்க வேண்டும். இதில் மூன்று பேர், 5 பேரை ஏற்றினால் கட்டுப்படியாகாது.
ஆட்டோக்களில் 3 பேர் மட்டுமே ஏற்ற வேண்டும். ஆனால், எந்த ஆட்டோவிலும் அந்த மாதிரி ஏற்றுவது கிடையாது. முன்பு டிரைவர் லைசன்ஸ் எடுக்க 8-ம் வகுப்பு வரை படித்திருக்கவேண்டும். தற்போது அந்த கட்டுப்பாடும் இல்லை. எல்லோரும் நினைத்தால் ஆட்டோ டிரைவராகி விடுகிறார்கள். பல ஆட்டோக்கள், எப்சி, இன்சூரன்ஸ், பர்மிட் இல்லாமல் ஓடுகிறது. ஆட்டோக்களுக்கு ஆண்டுதோறும் இன்ஸ்சூரன்ஸ் ரூ.8600, பெயிண்டிங் அடித்து வேலை செய்வதற்கு 4 ஆயிரம் என்று ரூ. 20 ஆயிரம் வரை செலவாகிறது. அதனாலே 3 பேருக்கு மேல் ஏற்ற வேண்டியாக உள்ளது” என்றார்.
மதுரையில் ஷேர் ஆட்டோக்கள் நெறிப்படுத்தப்படுமா என்பதை இருசக்கர, 4 சக்கர வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. காவல்துறை கவனிக்குமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT