Published : 08 May 2014 09:07 AM
Last Updated : 08 May 2014 09:07 AM

சென்னையில் பிடிபட்ட ஐஎஸ்ஐ உளவாளிக்கு பெங்களூர் குண்டுவெடிப்பில் தொடர்பு?

சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளி ஜாகீர் உசேனுக்கு பெங்களூர் பாஜக அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி ஒருவர் இலங்கை வழியாக சென்னைக்குள் ஊடுருவி இருப்பதாக க்யூ பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில், சென்னையில் நடத்திய தேடுதல் வேட்டையில் இலங்கையை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரை, கடந்த 29-ம் தேதி சென்னை மண்ணடியில் வைத்து கைது செய்தனர். பிடிபட்ட ஜாகீர் உசேன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி என்றும், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஜாகீர் உசேன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.

நுண்ணறிவுப் பிரிவு ஐஜி கண்ணப்பன், க்யூ பிரிவு எஸ்.பி. பவானீஸ்வரி ஆகியோர் தலைமையில் ஜாகீர் உசேனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "பெங்களூர் பாஜக அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் கோவையை சேர்ந்த ஹக்கீம் என்பவர் பெங்களூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள ஐஎஸ்ஐ உளவாளி ஜாகீர் உசேனுக்கும், ஹக்கீமுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் உள்ளன. தென் மாநிலங்களில் நடந்த பல சதித் திட்டங்களில் இவர்கள் இருவருக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். ஜாகீர் உசேனுடன் மேலும் மூன்று தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியிருக்கலாம் என்று நினைக்கிறோம். ஜாகீர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் இது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு தகவல்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்த இருக்கிறோம்" என்றார்.

ஜாகீர் உசேன் ஏற்கெனவே பலமுறை சிறை சென்றிருக்கிறார். தீவிரவாத செயல்களிலும், மனிதர்களை கடத்தி பணம் பறிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காகவும் சிங்கப்பூர் சிறையில் 4 ஆண்டுகளும், தாய்லாந்து மற்றும் இலங்கை சிறைகளில் தலா ஒரு ஆண்டும் அடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. திருச்சி விமான நிலையத்தில் வைத்து ஒருமுறை போலி பாஸ்போர்ட் வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறை சென்றிருக்கிறார் ஜாகீர் உசேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x