Published : 04 Jul 2015 03:13 PM
Last Updated : 04 Jul 2015 03:13 PM

தேர்தல் ஆணையரை இடமாற்ற வேண்டும்: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

’ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சந்திப் சக்சேனாவை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும்’ என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தினார்.

திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியின் அதிகார பலம், பணபலம், அடியாட்கள் குவிப்பு, வாக்குச் சாவடிகளை கைப்பற்றுதல், கள்ளவாக்கு போட்டது என்று ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டனர். இது 2016-ல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கிறது. அதற்கான ஒத்திகையை இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் செய்திருக் கிறார்கள்.

எனவே தமிழக தலைமை தேர்தல் ஆணையரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் 2016 பொதுத்தேர்தலும் நேர்மையாக நடைபெறாது. ஜனநாயகத்தை பணநாயமாக மாற்ற திராவிட கட்சிகள் முயலுகின்றன. இதை ஜனநாயகத்தில் நம்பிக்கை யுள்ளவர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் ஜனநாயகம் இருக்காது.

பல கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை. கட்சிகள் குடும்ப சொத்தாகிவிட்டன. அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் இல்லாவிட்டால் நாட்டிலும் ஜனநாயகம் இருக்காது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட படி மத்திய காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், தமிழகத்தில் நீர்நிலைகளை அரசுத்துறைகள் தூர்வாரி செப்பனிட வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்வ தில்லை. இதை செய்யுமாறு தற்போது பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது.

முல்லைப்பெரியாறு அணை யில் மத்திய பதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை தட்டிக்கழிப்பது சரியல்ல. கிரானைட் முறைகேடுகள் குறித்த சகாயத்தின் விசாரணைக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அந்த அறிக்கை வெளியாகிவிடக் கூடாது என்று அரசு செயல்படுகிறது.

மெட்ரோ ரயில் திட்டத்தை யார் கொண்டுவந்தது என்பது முக்கியமல்ல. அது பாதுகாப்பு டன் இயக்கப்பட வேண்டும். கட்டணத்தை குறைக்க வேண்டும். இலங்கையில் சகஜ நிலை திரும் பும்வரை இங்குள்ள அகதிகளை அங்கு திருப்பி அனுப்பகூடாது. இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை அளிக்க இந்திய, இலங்கை அரசுகள் முன்வர வேண்டும். தமிழகத்தில் கியு பிராஞ்ச் கட்டுப்பாட்டில்தான் இலங்கை அகதிகள் உள்ளனர்’ என்றார் அவர்.

திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x