Published : 02 Nov 2019 06:07 PM
Last Updated : 02 Nov 2019 06:07 PM
மதுரை
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு குறித்த முன்னேற்பாடு கூட்டம் மதுரையில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது.
வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன். முன்னிலை வகித்தனர்.
இப்பயிற்சியில் ஒவ்வொரு துறையினரும் கலந்துகொண்டு தங்கள் துறையில் உள்ள பாதுகாப்பு உபகரணங்களையும், வழிமுறைகளையும் காட்சிப்படுத்துவதுடன் அதனை செயலாக்கம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பேரிடர் காலங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பது குறித்தும், தங்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திப்பட்டது.
நிகழ்ச்சியில் ஜெ.ராதா கிருஷ்ணன் பேசியதாவது:
ஒவ்வொரு துறையினரும் பேரிடர் மேலாண்மை குறித்த முன்னேற்பாட்டுத் திட்டங்களை வகுத்து தயார் நிலையில் இருக்க வேண்டும். பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுவது தொடர்பான அறிக்கையினை தினந்தோறும் சமர்ப்பிக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள், குளங்கள், குட்டைகள், நதிகள், சாக்கடைகள், வாய்க்கால்கள் ஆகிய நீர்நிலைகளில் பொதுமக்கள் அறியும்வண்ணம் எச்சரிக்கை விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும்.
இடர் மற்றும் பேரிடர் எதுவென்பது குறித்து பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அக்காலங்களில் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதுதான் நமது முதற் கடமையாகும். பேரிடர், விபத்து யாருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். எனவே நாம் என்றும் தயாராக இருந்தால் எவ்வளவு பெரிய பேரிடர்களையும் தவிர்க்கலாம்.
நாட்டு நலப்பணி மாணவர்கள், தேசிய மாணவர் படை, ஸ்கவுட் மாணவர்கள், நேரு யுவகேந்திரா, ரெட்கிராஸ் என ஆர்வமுள்ள அனைத்து தொண்டு நிறுவனத்தினரையும் பேரிடர் காலங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில் அனைத்து துறையினரும் குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் காவல் ஆணையர் டேவிட்சன் தேவஆசிர்வாதம், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பி. பிரியங்கா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT