Published : 02 Nov 2019 11:35 AM
Last Updated : 02 Nov 2019 11:35 AM
மதுரை
தமிழ்நாடு மின்வாரியத்தில் 23,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில், அதனால், மின்விநியோகம் பாதிக்கப்பட்டால் மின் சீரமைப்பு பணிகளை எப்படி மின்வாரியம் சமாளிக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 3 கோடிக்கும் மேல் மின் நுகர்வோர்கள் உள்ளனர். மின்சார வாரியம், கடந்த 2003-ம் ஆண்டு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் என்றும் மின் தொடரமைப்புக் கழகம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
இதில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கீழ் செயல்படும் பிரிவு அலுவலக ஊழியர்கள்தான் மின்சாரத்தை விநியோகிப்பது, நுகர்வோரது வீட்டில் ஏற்படும் மின் தடங்கலை சரிசெய்வது, மின் தொடர்களில் ஏற்படும் தடங்கல், மற்றும் மின் தடை சரி செய்வது, மின் கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளை மின் துண்டிப்பு செய்வது, பணம் செலுத்தியவுடன் மறு மின் இணைப்பு வழங்குவது, மின்மாற்றி மற்றும் மின் தொடர் புதிதாக அமைப்பது, பராமரிப்பது, இரவுப்பணி, விடுமுறைநாள் பணி, அவசரப்பணி உள்ளிட்டப்பணிகளை மேற்கொள்வார்கள்.
தற்போது மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால், ஏற்கெனவே மின்விநியோகம் மற்றும் மின்தடையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மின்விநியோகத்தில் குறைபாடு, மின்தடை மற்றும் மின்பழுது ஏற்பட்டால் குறைந்தபட்ச ஊழியர்களை வைத்து எப்படி சமாளிப்பது என்பது எரியாமல் அதிகாரிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், ‘‘மின்சார வாரியத்தில் சுமார் 2,600க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்கள் உள்ளன. ஒரு பிரிவு அலுவலகத்தில் குறைந்த பட்சம் 6 கம்பியாளர்களும், 6 உதவியாளர்களும் சேர்த்து 12 பேர் பணிபுரிய வேண்டும்.
ஆனால், இருப்பது என்னவோ இரண்டு அல்லது நான்கு பேர் மட்டுமே. சில பிரிவுகளில் மேற்பார்வை செய்யும் ஃபோர்மேன், லைன் இன்ஸ்பென்டர் தவிர கம்பியாளர், உதவியாளர் யாரும் இல்லாத நிலையும் உள்ளது.
தற்போது இந்த பணியிடங்களில் சுமார் 23,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் களப்பிரிவில் உள்ளது. இதனால், மின்விநியோகிப்பது மற்றும் மின்சார பாராமரிப்பு பணிகள் ஸ்தம்பித்து, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த காலத்தில், இந்தப் பிரிவு அலுவலகங்களில், மின்ஊழியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தற்போது நியமிக்கப்படுவது இல்லை. தற்போது களப்பணிக்கு மின் பணியாளர்கள் இல்லாமல் மின்விநியோகம், பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்படுகிறது.
இதற்கிடையில், தினமும் மற்ற பணிகளை விட, கூடுதல் முக்கியத்துவம் வழங்கி மின் துண்டிப்பு பணிகளை செய்திட வேண்டும். இப்பணிகளை கண்காணிக்க போதுமான அதிகாரிகள் உள்ளனர். ஆனால், மின் துண்டிப்பு செய்திட மிகக் குறைந்த பணியாளர்கள் தான் உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கஜா புயலின்போது மின்கட்டமைப்பு அனைத்தும் சேதமடைந்த நிலையில் உடனடியாக அந்த பிரச்சனைகளை சமாளித்து பொதுமக்களுக்கு மின்விநியோகம் கிடைக்க ஏற்பாடு செய்தோம். கடந்த ஆண்டு அடிப்படை பணிக்கு 900 மின்ஊழியர்கள் எடுக்கப்பட்டனர். தொடர்ந்து காலியிடங்கள் நிரப்பப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT